கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி சீனாவை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஆரம்பம் முதலே சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வந்த அமெரிக்க நிதியையும் அவர் நிறுத்தி விட்டார்.
கடந்த 30-ந் தேதி கூட, சீனாவின் மக்கள் தொடர்பு அமைப்பாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருவதாக சாடியதுடன், அதற்காக அந்த அமைப்பு வெட்கப்பட வேண்டும் என்றும் தாக்கினார்.
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்றுநோய் 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை கொன்றுள்ள நிலையில், அமெரிக்கா மட்டுமின்றி ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும்கூட கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா மீது குற்றம் சாட்டுகின்றன.
ஆனால் கொரோனா வைரஸ் தோன்றிய வுகான் நகரில் இப்போது கடைசி கொரோனா நோயாளியும் குணம் அடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்ட நிலையில், இந்த தொற்று பாதித்த ஒருவர் கூட அங்கு இல்லை.
இதற்காக சீனாவை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது.
இதையொட்டி ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் நெருக்கடி திட்ட தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரிய வான் கெர்கோவ், இணையவழியாக நிருபர்களிடம் பேசியபோது கூறியதாவது:-
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்கியவர்கள் யாரும் இல்லை, உகானில் ஒருவர்கூட இந்த தொற்று பாதித்தவர் இல்லை என்று வந்துள்ள தகவல்கள் வரவேற்கத்தகுந்தவை. இந்த சாதனைக்காக அவர்களுக்கு பாராட்டுகள்.
கட்டுப்பாடுகளை எப்படி தளர்த்துவது, எப்படி இயல்பு நிலைக்கு சமூகத்தை கொண்டு வருவது, இந்த வைரசுடனே நாம் எப்படி வாழ்ந்து முன்னோக்கி செல்வது என்பதையெல்லாம் சீனாவிடம் இருந்து உலகம் கற்றுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சீனா கடுமையாக உழைத்தது. நான் அங்கு 2 வாரங்கள் இருந்தேன். அங்கு சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் நேரடியாக பணியாற்றினேன். மேலும் ஆஸ்பத்திரிகளில் இருந்து சமூகங்கள் வரை பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியபோது கொரோனா வைரஸ் பரவலை குறைக்க அவர்கள் உழைத்ததை அறிவேன்.
உகான் நகர மக்கள் சளைக்காமல் முயற்சிகள் எடுத்தார்கள். சுகாதார பணியாளர்கள் மட்டுமல்ல, வீடுகளில் உள்ள ஒவ்வொரு நபரும், பொது சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடித்து நடந்தனர். இதற்காக அவர்களை மனமார பாராட்டுகிறேன்.
உங்கள் அர்ப்பணிப்புக்கும், சேவைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நீங்கள் உங்களிடம் இருந்ததை உலகில் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. புதிதாக யாருக்காவது கொரோனா வைரஸ் தாக்கினால் உகான் மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சீனாவை உலக சுகாதார நிறுவனம் வெளிப்படையாக பாராட்டி இருப்பது அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.