அமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா, கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு அவகாசம்

302 0

அமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா, கிரீன் கார்டு பெற விண்ணப்பித்தவர்களுக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக அமெரிக்க குடியுரிமை துறை அறிவித்துள்ளது.அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ‘எச்1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்த ‘எச்1 பி’ விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.

இந்த ‘எச்1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். அதே போல் ‘எச்1 பி’ விசா மூலம் நீண்டகாலம் அங்கு பணியாற்றும் வெளிநாட்டினர் கிரீன் கார்டு பெற்று அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை பெறுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ‘எச்1 பி’ விசாவை நீட்டிக்கவும், கிரீன் கார்டு பெறுவதற்கும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிக்கின்றன. இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை, விண்ணப்பதாரர்கள் பல்வேறு வகையிலான சான்றிதழ்களை சமர்ப்பிக்க கோருவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ‘எச்1 பி’ விசாவை நீட்டிக்க மற்றும் கிரீன் கார்டு பெற விண்ணப்பித்தவர்கள் அவற்றுக்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த சலுகை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.