வன்முறையாளர்களாக பொலிஸார் மாறியது கண்டனத்துக்குரியது

403 0

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலைக் கண்டிப்பதுடன் பாரபட்சமற்ற விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் இளைஞரணிச் செயலாளர் சபா குகதாஸ் மேற்படி கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

நாட்டின் சட்ட ஒழுங்குகளை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் மக்களின் நண்பர்களாக நடந்து கொள்ளாமல் வன்முறையாளர்களாக செயற்பட்டு பெண்கள் மீது அடிதடிப் பிரையோகங்களை மேற்கொண்டமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் பயத்தையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸார் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத போதும் எதேர்ச்சதிகாரிகள் போன்று சட்டத்தை தங்களது கையில் முழுமையாக எடுத்துக் கொண்டமை வன்மையாக கண்டிக்கபபட வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பான பாரபட்சமற்ற விசாரணை உடனடியாக மேற் கொள்ளப்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் மீள நடைபெறாது என்பதை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா பாதிப்பு ஒரு புறம் இருக்க இவ்வாறான மேலதிக பாதிப்புக்கள் மக்களின் அமைதி வாழ்வுக்கு ஆரோக்கியமானது இல்லை. எனவே அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நியாயத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் – என்றார்.