தென்மராட்சியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தியினை இல்லாதொழிப்பதற்கு தென்மராட்சி இளைஞர்கள் முன்வர வேண்டுமென சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க.வாமதேவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தென்மராட்சியில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் கசிப்பு உற்பத்தியானது பெருமளவில் இடம்பெறுவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்,
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபான சாலைகளும் பூட்டப்பட்டு இருப்பதன் காரணமாக தென்மராட்சிப் பகுதியில் அதாவது மட்டுவில் கெடுடாவில் மறவன்புலவு சரசாலை போன்ற கிராமங்களில் சட்டத்துக்கு முரணான முறையில் மறைவானபற்றைகளுக்குள்ளும் ஆட்கள் இல்லாத வீடுகளிலும்கசிப்பு உற்பத்தி பெருமளவில் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனினும் இது தொடர்பில் நாம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸாரினாலும் பெருமளவு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு அதனோடு சம்பந்தப்பட்டவர்களும் கைது செய்யப்படுகின்றார்கள். எனினும் அது இன்றுவரை முற்றாக நிறுத்தப்படவில்லை. எனவே இந்த கசிப்பு உற்பத்தியினை நிறுத்துவதற்கு தென்மராட்சி இளைஞர்கள் பொலிஸாருடன் இணைந்து செயற்படுவதன் மூலமே இந்த கசிப்பு உற்பத்தியினைதென்மராட்சியில் முற்றாக ஒழிக்க முடியும். – என்றார்.
அத்துடன் அண்மையில் தமது பிரதேச சபையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது கசிப்பு உற்பத்தியை நிறுத்தக்கோரி ஒரு பிரதேச சபை உறுப்பினரால் விசேடபிரேரணை ஒன்றும் சபிக்கப்பட்டிருந்தது.
அன்றிரவு அவரது வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்களினால் அவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளமைக்கும் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்த தவிசாளர் இவ்வாறான சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.