ஆளும், எதிர்க்கட்சியினருக்கிடையில் வாக்குவாதம்!

270 0

steel-houseபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உத்தேசிக்கப்பட்ட பொருத்து வீட்டுத் திட்டத்தால் ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே விடுத்துள்ளதாக சிறீலங்காவின் தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் அரசகரும மொழி அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மனோகணேசனின் கருத்தை நிராகரித்தனர்.

இதன்போது, சிறீலங்கா நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் வரவு – செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பொருத்து வீடுகள், வடக்குக், கிழக்குப் மாகாண மக்களின் கலாச்சாரம் மற்றும் சூழலுக்கும் பொருத்தமற்றது எனத் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் மனோகணேசன், பொருத்து வீட்டுத் திட்டம் வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தன்னிடம் தெரிவித்ததாகத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறான கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லையெனத் தெரிவித்தார்.