மன வலிமையால் கொரோனாவில் இருந்து மீண்ட 95 வயது மூதாட்டி

308 0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 95 வயது மூதாட்டி தனது மன வலிமையில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.திண்டுக்கல்லில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான 95 வயது மூதாட்டி கடந்த 15 தினங்களுக்கு முன்பு கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் அவர் வைரஸ் தொற்றிலிருந்து சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்பினார்.

இதுபற்றி அந்த மூதாட்டி கூறும்போது, என்னை டாக்டர்கள், நர்சுகள் நன்றாக கவனித்துக் கொண்டார்கள். இப்போது நான் வீடு திரும்பி உள்ளேன். பேரன், பேத்திகளை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

அவரது பேத்தி ஒருவர் கூறும்போது, எங்கள் பாட்டிக்கு 26 பேரன், கொள்ளுப்பேரன், பேத்திகள் இருக்கிறார்கள். பாட்டியை மீண்டும் உடல் நலத்தோடு பார்ப்பது சந்தோ‌ஷமாக இருக்கிறது என்றார்.
கொரோனா வைரஸ்

சிகிச்சை அளித்த மருத்து வக்கல்லூரி டீன் ரோசி வெண்ணிலா கூறும்போது, நோய்த்தொற்றுக்கு ஆளான மூதாட்டியின் பேரன் டெல்லி மாநாட்டிற்கு சென்றிருந்தார். அவருக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்றால் வீட்டில் இருந்த மூதாட்டி உள்ளிட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் அந்த மூதாட்டிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இங்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தார்கள். அவருக்கு கண் பார்வை கோளாறு மட்டுமே உள்ளது. வேறு எந்த வியாதியும் கிடையாது. மன ரீதியாகவும் வலிமையாக இருந்தார். மனவலிமை இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கும். ஆகவேதான் 14 நாட்களில் அந்த மூதாட்டி தொற்றிலிருந்து விடுதலையானார் எனக்கூறினார்.

95 வயது மூதாட்டி கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று கடைசி நபராக அவரும் குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கு டாக்டர்கள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.