கடலூரில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று காலை இந்த சிலையின் வலது கை மற்றும் தலை உச்சியில் செருப்பு வைக்கப்பட்டிருந்தது. மேலும் கழுத்தில் வாசகம் எழுதப்பட்ட அட்டை ஒன்றும் தொங்கவைத்து அவமரியாதை செய்யப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து சென்று சிலையின் மீது இருந்த செருப்பு மற்றும் வாசகம் எழுதப்பட்ட அட்டையையும் அகற்றினர்.
இதற்கிடையே இதுகுறித்து அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டு, சிலையை அவமதிப்பு செய்த நபரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு, அம்பேத்கர் சிலையை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தி, பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தநிலையில் சிலையை அவமதித்த நபரை கண்டுபிடிக்க அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நேற்று காலை 9.30 மணி அளவில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிலையை அவமரியாதை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.