பாடசாலைகளைக் கையகப்படுத்தும் சிங்கள இராணுவம் – மே தினத்தில் நிம்மதி இழந்த தாயக மக்கள் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –
18ம் நூற்றாண்டில் கடினமாக பல மணிநேரங்கள் உழைத்த தொழிலாளர்களுக்காக 1ம் திகதி மே மாதம் 1886ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே தொழிலாளர் தினம் ஆகும். இவ்வருடம் தொழிலாளர் தினம் கொரோணா வைரசு காரணமாக கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் ஊர்வலங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அமைதியான சூழலில் தாயகத்தில் ஆக்கிரமிப்புகளும் அடக்குமுறைகளும் கச்சிதமாக நடைபெற்று வருகின்றது.
தாயகத்தில் இயங்கும் பல தமிழ் சிவில் அமைப்புக்களின் எதிர்ப்பையும் மீறி சிறிலங்கா இராணுவம் பாடசாலைகளை கொரோணாத் தனிமைப்படுத்தப்படும் மையங்களாக மாற்றும் நோக்கில் செயற்பட்டு வருவதாக அறிகின்றோம். சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் பள்ளிகளிலிருந்து தளபாடங்களை இடமாற்றம் செய்து கைப்பற்றப்பட்ட பள்ளிகளுக்கு மக்களை அழைத்து வருவதாகவும், அழைத்து வரப்படுபவர்கள் யார், எதற்காக, எங்கிருந்து அழைத்து வரப்படுகிறார்கள் என்ற விபரம் அறியமுடியாமல் உள்ளதாகவும் இவ் அமைப்புக்கள் கூறுகின்றன.
வட தமிழீழத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும், யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள தீவுகளிலும் Covid-19 பரவல் அடையாளம் அன்றுவரை குறைந்தளவில் காணப்படும் நிலையில், மக்கள் தொகை நிறைந்த பகுதிகளுக்கு மத்தியில் அதிக எண்ணிக்கையில் இராணுவத்தால் அமைக்கப்படும் தனிமைப்படுத்தும் நிலையங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Covid-19 பரவலின் தற்போதைய காலகட்டத்தில் பள்ளிகளைத் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றக்கூடாது என்ற விதிமுறைகள் ஏற்கனவே சிறிலங்கா கல்வி அமைச்சகம் அறிவித்துள்ள அதே வேளையில், தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம் வேறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றுவதானது தமிழின அழிப்பின் வேறு ஒரு வடிவமாகவே பார்க்கமுடியும்.
கொரோணாவைக் காரணம் காட்டி தமிழர் பகுதிகளுக்கு தெற்கிலிருந்து சிங்களவர்களை இரகசியமாகக் கொண்டு வருகிறார்களா என்ற பலத்த சந்தேகமும் உள்ளது.
2009ம் ஆண்டிற்குப் பின் போதைப்பொருள் பாவனை, குற்றவியல் செயற்பாடுகளை இளையோர் மத்தியில் பரவவிடுவதன் மூலம் தமிழர்களின் கல்வி வளர்ச்சி திட்டமிட்டு பாதிப்பிற்குட்படுத்திறார்கள். இதன் மூலம் காலங்காலமாகத் தமிழர்களை அடிமைப்படுத்துவதிலேயே குறிக்கோளாக உள்ளது பேரினவாத சிங்கள அரசு.
சிறிலங்கா இனவழிப்பு இராணுவம் பொதுமக்களின் கருத்துக்களைப் புறக்கணித்து முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்கிறது. இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மக்கள் குடியிருப்புகளில் இருந்து தொலைதூரத்தில் நிறுவப்பட வேண்டும். சிறிலங்கா இராணுவம் வேண்டுமென்றே அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட இடங்களில் தனிமைப்படுத்தல் மையங்களை உருவாக்குகிறது. அதுவும் திட்டமிட்டே வடக்கில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் ஒரு ஆரோக்கியமற்ற அடுத்த தமிழர் தலைமுறை உருவாக வேண்டும் என்பதே இந்த நகர்வுகளின் பின்னணியில் உள்ள நோக்கமாகும்.
சர்வதேசமே கொரோணா வைரசுத் தொற்றுக்குப் பயந்து வீட்டிற்குள் முடங்கியிருக்கையில் சிங்களப் பேரினவாத அரசு சத்தமில்லாமல் ஒரு இனவழிப்பு யுத்தம் செய்கின்றது.
இவ்வேளையில் சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள், தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி பெற்றுத்தரக்கூடிய நடைவடிக்கைகளில் சர்வதேச சமூகம் ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். எமக்கான நீதியையும் சுதந்திரமான தாயகத்தையும் அடையும்வரை தொடர்ந்து போராடுவோமாக.