மேன்மை கொள்ளாத
மே தினமே.
***** ****
மே மாதம் ஈழத்தின்
இனவழிப்பிற்கு காரணமாகி…
ஆழத்தில் அடிநாதம் அள்ள முடியாத துயர் ஊறும்..!
சேலை கிழித்தெறிந்து சிறுபிள்ளை பறித்தெறிந்து குருத்தோலை அறுத்தெறிந்து
மேலை நாடுகளும் ஆடைகளைந்த
அவமானம்…!
நந்திக்கடலும் இந்த நயவஞ்சகம்
அறியும்
சிந்திக்கிடந்த செங்குருதி சிவந்து கிடந்த பற்றுறுதி…!
கஞ்சிக்கு வரிசைகட்டிய
கணப்பொழுதுகளை
துண்டுத்துணியோடு உடல்த்துண்டுகளாய்
துப்பிக்கிடந்த குண்டுகளால்
கருகிப்போன பிஞ்சுகளை
நினைத்துக் கவலை கொள்மனமே…!
மேதினமே!
நூறாயிரம் குரல் கருகிப்போன
துயர் சூழ்ந்த நாள்
ஈழ தேசம் மறக்காத
தீ நாள் ….!
குஞ்சுகளும் பிஞ்சுகளும் இரத்தம் கொப்பளிக்க கஞ்சிக்கு வரிசை கட்டிய கரிநாள் இந்த மே நாள்…!
முள்ளிவாய்க்கால்! வயல்வெளியில் விடியலுக்கு ஏங்கிக்கிடந்த
உயிரற்ற உடலங்கள்…
ஊர்மனைகள் வீதி வயல் வரம்பு …
எங்கும் மேவிக்கிடந்த தமிழன் பாய்மர படகுகள்!
தமிழன் விழுந்து கிடந்து அனுங்கும் போதும் உலகம் வேடிக்கை பார்த்த நாள்
மே நாள் ..!
ஈழத்தில் துயர் பெருங்கடலோடு கலந்த நாள் மே நாள்
ஊமைக்கு உருகாத உவர்காலம்…!
உப்புக்கடலோடு சேர்ந்த வாழ் வாகும்…!
சிதைந்துபோன தமிழினமும்
கலைந்து போன கனவுகழும்
சேர்ந்து வரும் மாதம்
இந்த மே மாதம்…!
பஞ்சுகளாய்ப் பறந்த நினைவுகளை
நெஞ்சினிலே ஏந்துகின்ற
நிறைமாதம்
இந்த மே மாதம்…!
விடுதலைக்கு அது பெருமாதம்
துப்பாக்கி ஓயும்வரை போரிட்ட
பெருமிதம்…!
கேள்விகள் பலதோடு
மெளனமே காத்திருப்பு.
-ஈழத்து சுந்தர்-