குடத்தனையில் அராஜகத்தில் ஈடுபட்ட பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றில் ஆஜராகின்றார் சட்டத்தரணி சுகாஷ்

467 0

வடமராட்சி குடத்தனையில் பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக நீதிமன்றில் ஆஜராகப்போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் சட்டத்தரணி கே.சுகாஸ் அறிவித்துள்ளார்.

பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த மூன்று பெண்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்தரணி சுகாஸ் நேரடியாக வைத்தியசாலைக்கு சென்று அவர்களை பார்வையிட்டார்.

பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பாக குறித்த பெண்களிடம் சுகாஷ் கேட்டறிந்தார். பொலிஸார் தங்களை பெண்கள் என்றுகூட கருதாமல் தாக்கினர் என பெண்கள் தெரிவித்தனர். பெண்கள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கு பெண் பொலிஸாரே வரவேண்டும். ஆனால், ஆண் பொலிஸார் தங்கள் உடல்களில் பிடித்து இழுத்து, வீழ்த்தினர் எனவும் தாம் வீழ்ந்த பின்னர் கால்களால் மிதித்தனர் எனவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.

குறித்த விடயங்களைக் கேட்டறிந்த சட்டத்தரணி சுகாஸ், இது விடயமாக வழக்குத்தாக்கல் செய்யுமாறு ஆலோசனை வழங்கியதுடன், குறித்த வழக்கில் தான் இலவசமாக வாதாடுவார் எனவும் உறுதியளித்தார்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற குடத்தனை மாளிகைத்திடல் முகாமிற்கும் சென்ற சட்டத்தரணி சுகாஷ், அங்குள்ள உறவினர்களுடன் உரையாடினார். நடைபெற்ற சம்பவங்களை அவர் கேட்டறிந்தார்.