கிழக்கு மாகாணத்தில் மும்மொழி பேசக்கூடிய ஒரு ஆளுநர் நிச்சயம் வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கு கடந்த மாதம் வேதனங்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அந்த ஊழியர்களிடம் எழுத்துமூல அறிக்கையை கேட்டிருந்தோம்.
அவர்கள் எழுத்துமூல அறிக்கையை எங்களுக்குத் தரவில்லை. எழுத்துமூல அறிக்கைகள் கிடைத்திருந்தால் உள்ளூராட்சி ஆணையாளர் தெரியப்படுத்தி அவர்களது சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்போம்.
எங்களுக்கு எழுத்துமூல அறிக்கை கிடைக்கப்பெற்றிருந்தால் நாங்கள் ஆளுநருக்கும் உள்ளுராட்சி மன்ற ஆணையாளருக்கும் தெரியப்படுத்தி உடனே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுத்திருப்போம்.
கடந்த 30 வருடங்களாக எமது தொழிற்சங்கத்தின் ஊடாக தொழிலாளர்களுக்காகப் போராடி வருகின்றோம். கிழக்கு மாகாணத்திற்கு உரிய சரியான ஒரு ஆளுநர் இதுவரை நியமிக்கப்படவில்லை. மக்களுக்கு சேவையாற்றக் கூடிய ஒரு ஆளுநர் கிடைக்கப்பெறவில்லை. ஊழியர்களையும் கவரக்கூடிய ஒரு ஆளுநர் அமையப் பெறவில்லை.
தற்பொழுது ஆளுநராக கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் மக்களுக்கு என்ன நடக்கின்றது என்று கூட அறியாத நிலையில் இருக்கின்றார். மாவட்டம் தோறும் சென்று மக்கள் பிரச்சினைகளைக் கண்டறியவில்லை. அவ்வாறான ஒருத்தர் எதற்காக ஆளுநர் பதவியில் இருக்க வேண்டும்?
எமது மாகாணம் குறித்து அக்கறையற்ற ஒருவரை இந்தப் பதவியில் அமர்த்துவது சரியானதல்ல. அவரை பதவியில் நீக்கிவிட்டு எமது பகுதியைச் சார்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் மும்மொழி பேசக்கூடிய ஒரு ஆளுநர் நிச்சயம் வேண்டும். நிர்வாகத்தை சரியாக நடத்த வேண்டிய ஒரு ஆளுநர் இருந்தால்தான் அடிமட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை கூட தீர்க்கப்படும். நாங்கள் எமது அமைப்பு ரீதியாக அனுப்பும் கடிதங்களுக்குக் கூட பதில் கிடைப்பதில்லை” எனக் கூறியுள்ளார்.