முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு வடக்கு சுகாதார அமைச்சு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய காரணங்களினாலும் காயங்களுக்கு உள்ளாகி முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளின் நலன்கருதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சு விசேட நடமாடும் மருத்துவ சேவையொன்றினை வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்துள்ளது.
இந்த நடமாடும் மருத்துவ சேவைக்குழுவில் மருத்துவ தாதிய உத்தியோகத்தர், உளநல ஆலோசகர் மற்றும் சுகாதார பணியாளர் ஆகியோர் இடம்பெறுவரென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
சுயமாக நடமாடமுடியாது தொடர்ந்தும் படுக்கையிலிருக்கும் நோயாளிகள் படுக்கைப்புண் மற்றும் பல்வேறுபட்ட உபாதைகளை எதிர்நோக்குகின்றனர்.
சுயமாக நடமாடமுடியாமையினால் தமது மருத்துவ தேவைகளை நிறைவேற்ற மற்றவர்களில் தங்கி வாழுகின்றனர்.
இவர்களின் நன்மை கருதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் விசேட நடமாடும் மருத்துவ சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான நிதியுதவி புலம்பெயர் நாடுகளில் வாழும் உறவுகளினால் வழங்கப்படுகின்றது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த வாரங்களில் இந்த மருத்துவ நடமாடும் சேவை ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை பெறவிருப்புவோர் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அவசர அம்புலன்ஸ் சேவைக்கான தொலைபேசி இலக்கங்களான 0212224444 அல்லது 0212225555ற்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நோயாளர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழு தேவையேற்படின் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு நோயாளர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ சேவைக்கு கனேடிய செந்தில்குமரனின் நிவாரணம் நிறுவனமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ சேவைக்கு கனேடிய தமிழர் தேசிய அவை அமைப்பும் நிதியுதவி வழங்கி வருகின்றது. எதிர்வரும் காலங்களில் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் இந்த சேவை விஸ்த்தரிக்கப்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார்.