கொவிட்-19 அபாயத்தை முறையாக எதிர்கொள்வதற்கு பொது நலனை முன்னிறுத்த சிறிலங்கா அரசாங்கத்திடம் 8 கேள்விகளுக்கான பதிலை கேட்டுநிற்கிறது தமிழ் சிவில் சமூக அமையம்.
தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளர்களான அருட்பணி வீ. யோகேஸ்வரன் மற்றும் கலாநிதி குமரவடிவேல் குருபரன் ஆகியோரினால் இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த அறிவிப்பில், “ஒரு பொது சுகாதார அபாயக் காலப்பகுதியில் அவ்வபாயத்தை எதிர்கொள்வது தொடர்பாக பொதுத் தொடர்பாடல் வெளிப்படையாகவும் உண்மையாகவும் இருத்தல் வேண்டும்.
பேரிடர் காலங்களில் அரசாங்கம் சொல்வதையும் செய்வதையும் குடிமக்களும் சிவில் சமூகமும் வெறுமனே நுகர்ந்துகொண்டு இருக்க முடியாது.
சனநாயகம் என்பது பொது வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். கேள்வி கேட்பது பேரிடர் காலங்களில் சுமையாகக் கருத்தப்படக் கூடாது.
கொவிட்-19 அபாயத்தை முறையாக எதிர்கொள்வதற்கு பொது நலனை முன்னிறுத்த கேள்விகள் கேட்கப்படுவது அவசியமானது. அந்த வகையில் பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டுமென நாம் கோருகின்றோம்.
1.பொதுவாக உலகமெங்கும் ஊரடங்கை தளர்த்தும் அல்லது முடிவுக்கு கொண்டுவரும் உபாயமானது விஞ்ஞான ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூகத் தொற்று வீதம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பட்சத்தில் ஊரடங்கு தளர்த்தப்படலாம்.
அதாவது, புதிதாக இனங்காணப்பட எதிர்பார்க்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அவர்களைப் பராமரிப்பதற்கு எம்மிடம் உள்ள பொது சுகாதார வளங்களோடு ஒப்பிடும் போது சமாளிக்கத்தக்கதாக அமையும் போதே ஊரடங்கு தளர்த்தப்படலாம் என்பது உலகளாவிய ரீதியில் ஊரடங்கை தளர்த்துவதற்கான அளவுகோலாக, நடைமுறையாக இருக்கின்றது.
இலங்கையில் தற்போது சமூகத் தொற்று வீதம் என்ன? அது எம்மிடம் உள்ள பொது சுகாதார வளங்களோடு ஒப்பிடும் போது சமாளிக்கத்தக்கதாக அமைந்துள்ளதா? எந்த தரவுகளின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டது?
2. சமூகத் தொற்று வீதம் தொடர்பாக உண்மையான தரவுகளைப் பெற்றுக்கொள்ள பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இலங்கையில் செய்யப்படும் பரிசோதனைகளின் வீதம் அதிகரித்துள்ளதா? பரிசோதனைகளை செய்வதற்கான உபகரணங்களை வாங்குவதற்கு இலங்கை போதுமானளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா? தொற்றுக்கான குணங்குறிகள் இல்லாதவர்களிடமும் பரிசோதனைகளைச் செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளதா? இல்லையெனில் உண்மையான தொற்றுவீதம் என்ன என்பதனை பொது சுகாதாரத் துறை எவ்வாறு கண்டறிகின்றது?
3. ஊரடங்கு 19.04.2020 அன்று பெரும்பாலான மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்டது. ஊரடங்கை தளர்த்துவதற்கான திகதித் தெரிவு 20.04.2020 அன்று தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் திகதியை நிர்ணயிப்பதற்கான கூட்டத்தை இலக்கு வைத்து நிர்ணயிக்கப்பட்டதா? ஊரடங்கை உடனடியாக தளர்த்த வேண்டாம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பரிந்துரை செய்திருந்தும் அதனை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?
4. தொற்று மீள உச்சம் பெறாமல் தடுக்கும் குறிக்கோளை தக்கவைத்துக்கொண்டு மீண்டும் இயல்பு நிலைக்குப் படிப்படியாக செல்ல அரசாங்கத்திடம் முறையாக திட்டம் உண்டா? அவசரப்பட்டு மே 11, 2020 அன்று பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் ஆரம்பிக்கப்படும் என அறிவித்ததும் பின்னர் பின் வாங்கியதும் ஏன்? பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மீளத் திறக்கும் பட்சத்தில் அவற்றில் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தின் திட்டமென்ன? சமூக இடைவெளியை சாத்தியப்படுத்தத் தேவைப்படும் நிதி வளங்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதா?
5. இராணுவத்தினால் நடத்தப்பட்ட தனிமைப்படுத்தும் நிலையங்களில் பின்பற்றப்படும் நியமங்கள் என்ன? இராணுவத்தினால் தனிமைப்படுத்தும் நிலையங்களை எங்கு அமைப்பது என்ற முடிவு பொது சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலில் எடுக்கப்படுகின்றதா? இந்நிலையங்களை நடத்தும் பொறுப்பை பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களிடம் ஏன் விட முடியாது? இடர் காலப் பணி என்பதற்கப்பால் பொது சுகாதாரப் பிரச்சினையைக் கையாள, தலைமை தாங்க இராணுவத்தினருக்கு அதிகாரம் அளித்தது ஏன்? அவர்களுக்கு அது தொடர்பாக இருக்கும் பயிற்சி என்ன?
6. மீள தொற்றுக்கள் உத்வேகம் பெரும் சூழலில் மீள ஊரடங்கு ஒன்று தேவைப்படும் பட்சத்தில் நாளாந்த ஊதியம் மற்றும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்கள் பசியால் வாடாதிருக்க அரசாங்கத்தின் திட்டமென்ன? சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கிய கொடுப்பனவைத் தாண்டி பசி பட்டினியைக் கையாள அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதா?
7. ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு இது வரை என்ன? இதன் தாக்கம் எத்தகையது? அதை எதிர்கொள்ள அரசாங்கத்தின் திட்டமென்ன?
8. ஊரடங்கு உட்பட கொவிட் 19 தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், உரிய சட்டமுறை வழி செயற்படுத்தப்படாமைக்கு அரசாங்கம் கூறும் காரணம் என்ன? கொவிட்-19 இற்கு செலவு செய்யப்படும் நிதி நாடாளுமன்றினால் அங்கீகரிக்கப்படாமல் செலவு செய்யப்படுவது பொது நிதிக் கையாளுகை தொடர்பாக மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கி விடாதா?
மேற்கண்ட கேள்விகள் உணர்த்துவது யாதெனில் கொவிட்-19ஐ எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் அரசியலை பிரதானப்படுத்துகின்றது என்பதையே ஆகும்.
மேற்படி கேள்விகளுக்கு அரசாங்கம் விடை பகிர வேண்டும். கொவிட்-19 ஐ இதுவரை எதிர்கொண்ட விதம் தொடர்பாகவும் இனி எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளவை குறித்தும் விரிவான வெள்ளை அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் பொதுவெளியில் முன்வைக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.