மக்களை மட்டுமல்லாமல் நாட்டில் அரசியலையும் கொரோனா குதறிக் கொண்டிருக்கின்றது. அந்தக் குதறலில் பொதுத் தேர்தலை நடத்த முடியாமல் தேர்தல் ஆணையகம் தடுமாறுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன. அவற்றை எதிர்கொண்டு செயற்ட வேண்டியுள்ளது.
ஆகவே கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து, அவசர நிலைக்குச் சென்று மீண்டிருந்த நாட்டில் மீண்டும் அவசரகால நிலைமை உருவாகியிருக்கின்றது
எல்லோரையும் கொன்றொழிக்கப் போகிறேன் என்று கொரோனா தனது கோர முகத்தைக் காட்டி அச்சுறுத்திக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தை ஈடுபடச் செயற்வதற்காக இராணுவம் வீதிக்கு இழுக்கப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் பாதுகப்புச் சட்டத்தின், 40 அத்தியாய 12 ஆவது பிரிவின் கீழ் நாட்டில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இராணுவத்தினரை சேவையில் ஈடுபடுமாறு ஜனாதிபதி அழைத்துள்ளார்.
ஏப்ரல் 22 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நாட்டில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. பொதுமக்களை குடும்பங்களுடன் தனிமைப்படுத்தி தத்தமது வீடுகளில் அரசாங்கம் முடங்கச் செய்திருக்கின்றது.
ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு எவரும் செல்ல முடியாதென்று தடையுத்தவும் பிறப்பிக்கப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்படுகின்றது
ஊரடங்கு வேளையிலும் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற தருணத்திலும் தனிமைப்பட்டிருத்தலைக் கைவிட்டு கட்டுக்கடங்காமல் திரிபவர்களையும் செயற்படுபவர்களையும் பொலிசார் கைது செய்கின்றனர். கைது செய்யப்படுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த நடவடிக்கைகள் கொரோனாவின் கோரப் பசிக்கு இரையாகாமல் மக்களைக் காப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுடைய பேச்சுச் சுதந்திரம், நடமாடும் உரிமை, இயல்பாகச் செயற்படுகின்ற உரிமை என்பன இதனால் மறுக்கப்பட்டிருக்கின்றன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி, நாட்டு மக்களை இறுக்கமாகக் கட்டுப்படுத்தி, பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இராணுவத்தைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி பலருடைய மனங்களிலும் எழுந்திருக்கின்றது.
ஆனால் இந்தக் கேள்வியைப் பகிரங்கமாக வாய்விட்டு கேட்பதற்கு அவர்கள் அச்சமடைந்திருக்கின்றார்கள். கொரோனாவின் கொலைவெறியும் அது தொற்றிப் பரவுகின்ற அசுர வேகமும் இதற்கு முக்கிய மறைமுகக் காரணமாகும்.
கொரோனா கொள்ளை நோய்த்தாக்கத்திற்கு எதிரான ஒரு போராட்டமே நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் சிரமேற்கொண்டு நடக்க வேண்டும் என்ற மனப்பாங்கிலேயேபெரும்பான்மையான நாட்டு மக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றர்கள்.
கொரோனா நோய்த்தாக்கத்தினால் நாட்டில் மிகவம் ஆபத்தான நிலைமை உருவாகி இருக்கின்றது என்பது உண்மைதான். அதனை மறுக்க முடியாது. அதற்காக வரையறையற்ற முறையில் அரசாங்கம் நடந்து கொள்வதா? நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக ஜனாதிபதி நாட்டு மக்கள் மீது அளவற்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா என்ற கேள்விகள் மக்கள் மனங்களில் எழுந்திருக்கின்றன.
மோசமான நோய்த்தாக்கம் ஏற்பட்டிருக்கின்ற சூழலில் உண்மையில் சட்ட ரீதியான நிலைமை என்ன? ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த முடியுமா? நாட்டில் பொது ஒழுங்கைப் பேணுவதற்கு இராணுவத்தைத் துணைக்கு அழைத்துச் செயற்பட முடியுமா?
நோய்த் தொற்றுவதைத் தடுக்கின்றோம் என்ற பெயரில் பொதுமக்கள் மீது வரையறையற்ற முறையில் கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா? இது சர்வாதிகாரப் போக்கிலான இம்சையல்லவா? – இதுபோன்ற கேள்விகளையும் இப்போதைய சூழல் எழுப்பியிருக்கின்றன.
உண்மையில் நாட்டின் நோய் அரசியல் நிலைமையும் அது சார்ந்த ஆட்சிப் போக்குமே நிலவுகின்றன.
இந்த நோய் அரசியல் நிலைமை நாட்டு மக்களுக்குப் புதியது. குறிப்பாக இந்த நாட்டின் பல தலைமுறை மக்களுக்கே புதியது. ஒரு கொள்ளை நோய்த்தாக்கம் ஏற்பட்டால் என்னென்ன நிலைமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கும், என்னென்ன நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை கொரோனா எமது நாட்டில் இந்தத் தலைமுறையினருக்கு உணர்த்தி இருக்கின்றது.
இதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பிளேக் கொள்ளை நோய் இலங்கையில் பரவி பெருமளவிலானோரின் உயிரைக் குடித்தது. அப்போது (Quarantine and Prevention of Diseases Ordinance No.03 of 1897 – QPDO)
கியூபிடிஓ என்ற 1897 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்க நோய்த்தடுப்புச் சட்ட ஏற்பாடு தொற்றொதுக்கச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. பிளேக், காலரா, மஞ்சள் காய்ச்சல், டைபஸ், சின்னம்மை போன்ற கொடிய நோய்கள் தொற்றிப் பரவுவதைத் தடுப்பதற்காக இந்தச் 1925, 1933, 1946 ஆகிய நாடு சுதந்திரமடைவதற்கு முந்திய ஆண்டுகளில் தேவைக்கேற்ப திருத்தங்களுக்கு உள்ளாக்கி ஆளுனரின் பிரகடனத்துக்கமைய பயன்படுத்தப்பட்டது.
நாடு சுதந்திரமடைந்த பின்னர் 1960 ஆம் ஆண்டு மாற்றத்திற்கு உள்ளாகிய இந்த நோய்த் தொற்றொதுக்கச் சட்டம் இப்போது, கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்குப் பெரிதும் கைகொடுத்துள்ளது. சுகாதார அமைச்சரினால் கொரோன வைரஸ் கொள்ளை நோயும் இந்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டு இப்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2167/18 என்ற இலக்கம் கொண்ட விசேட வர்த்தமானியில் இந்தச் சட்டம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது. பரந்து விரிந்த பல்வேறு சட்ட நடைமுறை வல்லமைகளைக் கொண்டது, சுகாதார அமைச்சினதும், அதிகாரிகளினதும் சுகாதார மருத்துவ தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்தச் சட்ட நடைமுறைகள் பிரகடனப்படுத்தப் படுகின்றன. அவற்றை பொலிஸார் நடைமுறைப்படுத்துவார்கள்.
அதற்காக பொலிஸ் சட்ட நியதிகளுக்கமைய ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்து நடைமுறைப்படுத்தவதற்கு பொலிஸாருக்கு இந்த நோய்த் தொற்றொதுக்கச் சட்டம் அதிகாரமளித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பரந்த விரிந்த செயற்பாடுகளைக் கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினரும் பொலிஸாரும் இந்தச் சட்டத்தின் கீழ் முன்னெடுப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டு மக்களின் நடமாட்டம், தொழில் நடவடிக்கைகள், பிரயாணம் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்துவதற்கும் அவர்களைப் பல்வேறு வழிகளில் தனிமைப்படுத்துவதற்கும் இந்தச் சட்டம் வழிவகுத்துள்ளது.
நோய்த்தொற்று அவதானிக்கப்பட்ட இடத்தில் உள்ளவர்களை அங்கிருந்து முழுமையாக வெளியேற்ற அல்லது அங்கேயே தடுத்து வைக்கவும் இந்தச் சட்டம் அதிகாரிகளுக்கு அதிகாரமளித்துள்ளது.
அத்துடன் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிய யாருடையதேனும் பொருட்கள், சொத்துக்கள் என்பவற்றைக் கைப்பற்றுவதற்கும் அவற்றைத் தொற்று நீக்குவதற்கும், அவசியமானால் அழிப்பதற்கும் இந்தச் சட்டத்தில் அதிகாரமுண்டு.
அதேபோன்று உள்நாட்டில் இருந்து எவரையும் வெளிநாடுகளுக்குச் செல்லவிடாமல் விமான, கப்பல் மற்றும் கடல், தரைவழிப் போக்குவரத்துக்களைத் தடுப்பதற்கும், வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியாதவாறு தடை செய்வதற்கும் இந்தச் சட்டம் இடமளித்திருக்கின்றது.
அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையும் மீறுகின்ற அதிகார வலு இந்த (QPDO) கியூபிடிஓ என்ற நோய்த்தொற்றொதுக்குச் சட்டத்திற்கு உள்ளது என்பது மிக மிக முக்கியமான விடயமாகும்.
அரசியலமைப்பின் முக்கியத்துவம் மிக்க 14 ஆம் சட்டத்தில் உள்ள ஒரு குடிமகனுக்குரிய பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடும் உரிமை, கூட்டுச்செயற்பாடு, நடமாடும் உரிமை, தொழில் மற்றும் பிரயாணத் தேவைகளின்போது வெளியிடங்களில் இருந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் திரும்பி வருகின்ற உரிமை உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் இந்தச் சட்டத்தின் முன்னால் வலுவிழந்திருக்கின்றன.
இந்தச் சட்டத்தின்படி அனைத்து குடிமக்களும் ஒழுக வேண்டும். அதனை நடைமுறைப்படுத்துகின்ற பொலிஸார் மற்றும் அதிகாரிகளின் கடமைகளுக்குக் குந்தகமோ, தடையோ ஏற்படுத்த முடியாது. அவ்வாறு செயற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்படுகின்ற ஒருவர் 6மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். தண்டப் பணமும் (ஆயிரம் ரூபா) செலுத்தவும் வேண்டி இருக்கும். சிறை அல்லது தண்டப்பணம் அல்லது குற்றத்தின் தன்மைக்கேற்ப இரண்டையும் அனுபவிக்க நேரிடலாம்.
அது மட்டுமல்ல. இந்தத் தொற்றொதுக்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நாட்டின் குற்றவியல் மற்றும் பொலிஸ்துறை சட்டங்களும் துணை செய்கின்ற வகையில் நடைமுறைப்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சட்டத்தை சுகாதாரத்துறையினரும், பொலிஸாரும் படையினரும் நடைமுறைப்படுத்தி வருகின்ற போதிலும், இதுவரையிலும் சட்டமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து தண்டனை விதிக்கப்படவில்லை என்பது ஆறுதல் தருகின்ற நிலைமையாகும்
இருந்தாலும் ஊரடங்கு வேளையில் தகுந்த காரணமின்றி நடமாடியவர்களும், தொற்றொதுக்கலுக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற முடக்க நிலையை மீறியவர்களும் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுதிக்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அரசினால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதான் இன்றைய நாட்டின் நோய் அரசியல் ஆட்சி முறையின் யதார்த்த நிலைமை.
தனேத்ரா தினேசன்