மட்டக்களப்பு – மங்களாராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் செங்கலடி – பதுளை வீதியின் பன்குடாவெளி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றுக்கு வருகைத் தந்ததை அடுத்து அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த காணியில் முன்னர் பௌத்த வழிபாடுகள் நடாத்தப்பட்டமைக்கான அடையாளம் காணப்படுவதாக தெரிவித்து அவர் தனியார் காணியொன்றிற்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்தே இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த காணியில் அரச மரமொன்று காணப்படுவதாகவும், புராதன பௌத்த அடையாளங்கள் காணப்படுவதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால், இந்த பகுதியில் பௌத்த வழிபாட்டு தளமொன்றை ஸ்தாபிக்க வேண்டியது அவசியம் என மங்களாராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
தேரர் குறித்த தனியார் காணிக்குள் அத்துமீறி பிரவேசித்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒன்று கூடியிருந்ததாகவும், நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அதிகாரிகளும் வருகைத் தந்து தேரருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளனர்.
அந்த பேச்சுவார்த்தைகளுக்கும் தேரர் இணக்கம் காணாத நிலையில், குறித்த இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் வருகைத் தந்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துக்களையும் பொருட்படாது தேரர் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற உத்தரவை உடனடியாக பெற்று பௌத்த பிக்குவை குறித்த காணியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், பொலிஸார் தொடர்ச்சியாக பௌத்த பிக்குவுடன் சமாதானமான முறையில் பேச்சுவார்த்தைகளை நடாத்தி அவரை அங்கிருந்து மட்டக்களப்பு செயலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
தேரரின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடர்பில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0