சிகையலங்கார தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்!

270 0

தொடர்ச்சியாக சிகையலங்கார நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சிகையலங்கார தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கும் உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள ‘கொரோனா’ வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது

தற்போது காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மீண்டும் ஸ்தம்பிதம் அடைந்த நடவடிக்கைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பித்துள்ளது.

ஆனால் சிகையலங்கார நிலையங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளது. இதனால் சிகையலங்கார தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களும் தொடர்ச்சியாக பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே சிகையலங்கார நிலையங்களை சுகாதார முறைப்படி திறந்து அவர்களின் தொழிலை பாதுகாப்புடன் மேற்கொள்ள அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

சிகையலங்கார நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் சிகையலங்கார தொழிலாளர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பணவையும், உரிய நிவாரணத்தையும் வழங்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

வடக்கு-கிழக்கில் பல நூற்றுக்கணக்கான சிகையலங்கார தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு தொழில் இன்மையால் அவர்களின் குடும்பங்களும் பல்வேறு வகையில் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே அரசு அவர்கள் மீதும் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.