மன்னாரில் நெருக்கடி சூழ்நிலையில் கடுமையாகப் பாதிக்கப்படும் தோட்டச் செய்கையாளர்கள்!

293 0

மன்னாரில் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில் தாம் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாக தோட்டச் செய்கையாளர்கள் கெவலை வெளியிட்டுள்ளனர்.

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இராசமடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தேவராசா என்பவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

குறிப்பாக குடை மிளகாய், பயற்றங்காய், கச்சான் போன்ற பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்ற அவர், தன்னுடைய உற்பத்திகளை தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த விலைக்கு விற்பனை செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் கடந்த மாதம் முதல் அரசாங்கத்தினால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

இதனால், கடந்த பல நாட்களாக தன்னுடைய உற்பத்தியை சந்தைப்படுத்த முடியாத நிலையில் மரக்கறிகளை அறுவடைசெய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் அறுவடை செய்தால் அடிமட்ட விலைக்கே உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யக் கூடியதாக உள்ளதாகவும் ஆறுமுகம் தேவராசா கவலை தெரிவிக்கின்றார்.

இதனால் தற்போது, பூக்கள் மற்றும் காய்கள் உருவாகுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காலப்பகுதியில் அரசாங்கத்தினால் உள்ளூரில் குறித்த மரக்கறிகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட போதிலும் வாகனங்களில் கிராமம் கிராமமாகக் கொண்டுசென்று விற்பனையில் ஈடுபட்டாலும் குறைந்த விலைக்கே விற்கவேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றார்.

அதேபோல், தற்போதைய நிலையில் உரம், பசளைகளைப் பெற்றுக் கொள்வதும் கடினமாக இருப்பதாகவும் அரசாங்கம் விவசாயிகளின் நிலையைப் புரிந்துகொண்டு மானிய அடிப்படையிலோ அல்லது கடன் அடிப்படையிலோ உரங்களை வழங்கி உதவவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.