சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் எலிக் காய்ச்சல் நோயும் தலைதூக்கி வருவதாக சுகாதார துறையின் விபரங்கள் தெரிவிக்கின்றன.
எலிக்காய்ச்சல் நிலைமை குறித்து, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் தகவல்களின்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1352 எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரியவந்தது.
கடந்த ஜனவரி மாதம் 665 எலிக்காய்ச்சல் நோயாளிகளும், பெப்ரவரி மாதம் 453 நோயாளிகளும், மார்ச் மாதம் 188 பேரும் ஏப்ரல் மாதத்தில் இதுவரை 45 எலிக்காய்ச்சல் நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்களின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் அதிகமான எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் இவ்வருடம் இரத்தினபுரி சுகாதார மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அங்கு இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 273 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எலிக்காய்ச்சல் காரணமாக, வெலிசர கடற்படை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெலிசறை கடற்படை தலைமையகத்தில் பணியாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவர் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.