கொரோனா தடுப்பு பணி- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

296 0

நெருக்கடியான நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பாக பணியாற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், கொரோனா  தாக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
மே 3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவை தளர்த்தலாமா? அல்லது நீட்டிக்க வேண்டுமா? என்பது குறித்து கலெக்டர்களிடம் கேட்டறிந்தார். கள நிலவரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் எடுத்துரைத்தனர்.
அப்போது பேசிய முதலமைச்சர், அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை முழுமையாக தடுக்கலாம் என்று அறிவுறுத்தினார்.
கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், நகர்ப்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
மேலும், நெருக்கடியான நிலையில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர்களின் சிறப்பான பணியால் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதாக கூறினார்.