இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் கடமையாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த கூடிய கவனம் செலுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளை பணித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு மேலதிக சுகாதார சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பது குறித்து போக்குவரத்து அமைச்சில் நேற்று (28) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அதற்கமைய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு முக கவசங்களையும், கையுறைகள் மற்றும் கைகளை சுத்திகரிக்க கூடிய இயந்திரங்களையும் வழங்க இதன்போது முடிவு செய்யப்பட்டது.
நாட்டின் சில பகுதிகளில் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாததால் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
இது தொடர்பில் இன்று (29) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.