ஊரடங்கு உத்தரவு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

362 0

 கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த 21 மாவட்டங்களிலும் நேற்றிரவு இரவு 8 மணிக்கு மீள ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அந்த மாவட்டங்களில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிவரை நாளாந்தம் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு தளர்த்தப்படும்.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் படி முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் குறுகிய கால விடுமுறைகள் என்பன மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்;டுள்ளது.

இதேவேளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளிலும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள தேசிய அடையாள அட்டை திட்டதுக்கு அமைய புதன்கிழமைக்கான தேசிய அடையாள அட்டையி;ன் 5 அல்லது 6 என்ற இறுதி இலக்கங்களை கொண்டவர்கள் மாத்திரம் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேற முடியும்.

மக்களின் நடமாட்டத்தை குறைக்கும் அடிப்படையில் அரசாங்கம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.  இந்த நிலையில் தற்போது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் இன்று இரவு 8 மணிக்கு மீள ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

கொரோனா இடர்வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துநை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் 4ம் திகதி வரையில் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.