5 ஆயிரம் பேர் பலி… கொரோனாவின் அடுத்த இலக்காக மாறிவரும் பிரேசில் – அதிர்ச்சி தரும் தகவல்

312 0

போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் 31 லட்சத்து 35 ஆயிரத்து 557 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 64 ஆயிரத்து 866 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 307 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரஸ் பரவியவர்களில் 9 லட்சத்து 52 ஆயிரத்து 942 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 17 ஆயிரத்து 749 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்த கொரோனா கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் கோரத்தாண்டம் ஆடிவருகிறது.
உலக அளவில் வைரஸ் பரவியவர்கள், பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஆனால், தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
பிரேசில் நாட்டில் 72 ஆயிரத்து 899 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த உயிரிழப்புகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரு மாத கால இடைவேளியில் நடந்துள்ளது.
போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், வைரஸ் யாருக்கு பரவியிருக்கிறது என்ன கண்டறிய போதிய பரிசோதனை கருவிகள் இல்லாததாலும் வைரஸ் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் வீடுகளிலேயே உயிரிழந்துவரும் (2 வாரங்களில் 236 பேர்) கொடுமையான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
கொரோனாவால் உறவினரை இழந்த நபர்
இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து கொரோனாவுக்கு அடுத்த இலக்காக பிரேசில் நாடு மாறி வருகிறது.
இந்த நிலைமையின் தீவிரத்தன்மையை உணராத அந்நாடு அதிபர் ஜெயிர் போல்சனரோ கொரோனா வைரசை ‘சிறிய காய்ச்சல்’ என்றும் அதனால் நாட்டிற்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டாம் எனவும் தெரிவித்து வருகிறார்.
மேலும், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்திய அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரியான லூயிஸ் ஹெண்டிக்யூ மண்டிட்டாவையும் அதிபர் போல்சனரோ கடந்த 18-ம் தேதி மந்திரி பதவியில் இருந்து நீக்கிவிட்டார்.
பிரேசிலில் தற்போது தட்பவெப்பநிலையாலும், போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தாலும் கொரோனாவின் அடுத்த இலக்காக மாறிவருகிறது. குறிப்பாக வைரஸ் பரிசோதனை வசதிகள் இல்லாததால் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.