போரினால் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் சாதனை!

365 0

போர்த் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சாதித்துள்ளனர்.

முல்லைத்தீவு – முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த தண்ணீரூற்று மேற்கு, முள்ளியவளையில் வசிக்கும் கெங்காதரன் பவதாரணி, நாவலர் வீதி, முள்ளியவளையில் வசிக்கும் மதியழகன் விதுர்சிகா ஆகிய மாணவிகள் இருவரே இவ்வாறு சாதித்துள்ளனர்.

2009ம் ஆண்டு இருவேறு சம்பவங்களின் போது காயமடைந்திருந்தனர். இவர்களில் பவதாரணி முள்ளிவாய்க்கால் பகுதியில் எறிகணைத் தாக்குதலில் சிக்கி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் எழுந்து நடமாட முடியாமல் இருக்கிறார்.

இதேபோல் விதுர்ஷிகா இறுதிப்போர் முடிவில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் வவுனியா – ஆனந்தகுமாரசாமி நலன்புரி முகாமில் தங்கியிருந்தபோது இராணுத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து தண்டுவடம் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.

இந்நிலையிலேயே பவதாரணியும் விதுர்ஷிகாவும் கல்வியில் சாதித்துள்ளனர். இதன்படி பவதராணி 8-ஏ,பி, விதுர்ஷிகா 6-ஏ,பி, 2-சி என பெறுபேறுகளைப் பெற்று தம்மை சாதனையாளர்களாக நிரூபித்துள்ளனர்.