ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஆவா குழு உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 11 பேரை எதிர்வரும் 16 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த 11ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் 11 பேரும் இன்று மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த நபர்களை தொடர்ந்து 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இரவிச்சந்திரன் நிதுசன், லோகநாதன் தர்ஷிகன், மகாதேவன் கந்தகன் மற்றும் ரவிந்திரன் நிலூஷன் உள்ளிட்ட 11 பேர் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் இணைந்து அவர்களுடன் தொடர்புகளை பேணி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கு உதவி ஒத்தாசை பரியும் முகமாக ஆவா எனும் பெயரில் ஆயுதக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக மன்றில் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்தக்குழுவானது வடக்கில் கடமையில் ஈடுபட்டுள்ள உளவுத்துறையினர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணம் செயற்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.