ஜெர்மனியில் மாஸ்க் அணியாவிட்டால் இந்திய ரூபாய் மதிப்பில் 8 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த விதிமுறையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜெர்மனியில் ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களுக்கு வரும்போது மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாத குற்றத்திற்கு அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பொது இடங்கள், பொது போக்குவரத்து, நீண்ட தூர ரெயில்கள் மற்றும் கடைகளுக்கு மாஸ்க் அணியாமல் வரும் மக்கள், கடை ஊழியர்கள், மாஸ்க் அணிவதை உறுதி செய்யாத வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் என அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும். 25 யூரோ முதல் 10000 யுரோ (இந்திய ரூபாய் மதிப்பில் 8 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும்.
விதிமுறைகளை மீறி ஒரு முறை தண்டிக்கப்பட்டவர் மீண்டும் சிக்கினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.