மன்னாரில் மூன்று இடங்களில் 7 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜா வினோதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படை சிப்பாய் ஒருவருடன் நெருங்கிப் பழகிய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சாரதி ஒருவர் அலுவலகப் பணி நிமித்தம் மன்னாருக்கு வந்துசென்றுள்ள நிலையில் அவருடன் தொடர்புடைய 7 பேரே சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்,
“அண்மையில் விடுமுறையில் சென்று மீண்டும் வவுனியா திரும்பிய கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடன் நெருங்கிப் பழகிய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சாரதி ஒருவர் மன்னாருக்கு வந்து சென்றுள்ளார்.
குறித்த சாரதி அலுவலகப் பணிக்காக வந்து மூன்று இடங்களுக்குச் சென்றுள்ள நிலையில் அந்த மூன்று இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் அவ்விடங்களில் இருந்த 7 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதைவிட, மன்னார் மாவட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினுடைய தலைமை அலுவலகத்திற்கும் குறித்த சாரதி வந்து சென்றுள்ளமையினால் குறித்த அலுவலகத்தில் இருக்கின்ற சில உத்தியோகத்தர்களை அலுவலகத்தில் இருந்துகொண்டே கடமையாற்றும் படியும் அவர்களை வெளியில் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், அத்தியாவசியச் சேவையில் ஈடுபடுகின்றவர்கள். இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. பரிசோதனை முடிவடைந்தவுடன் குறித்த அலுவலகம் மீண்டும் வழமைபோல் இயங்க அனுமதிக்கப்படும்.
ஏனையவர்களுக்கு, பரிசோதனை செய்வதற்கு முன்னர் குறித்த சாரதிக்கும் வவுனியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்கின்ற பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தப் பரிசோதனைகளின் முடிவுகளுக்கு அமைய ஏனையவர்களுக்கான பரிசோதனை தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும்.
மேலும், மன்னார் நடுக்குடா பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் காற்றாலை மின்உற்பத்தி வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பணியாளர்கள் சிலருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் முடிவுகள் வெளிவரவுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து அவர்கள் அனுமதிபெற்று வந்தாலும் மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை என்ற காரணத்தினால் அவர்களிடம் தேர்ந்தெடுத்த மாதிரிகளைக் கொண்டு அவர்களுக்கு இவ்வாறான சோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.
வெளி மாவட்டங்களுக்கு அடிக்கடி சென்று வருகின்ற சில சாரதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது” என்று குறிப்பிட்டார்.