உமா ஓயா பலநோக்கு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் கரந்தகொல்ல நீர்மின் திட்டத்தின் பணிகள் இன்னும் ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும் என சிறிலங்காவின் போக்குவரத்து, மின்சக்தி வலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதன்பின்னர், இலங்கை மின்சார சபைக்கு நாளொன்றுக்கு ஒன்றரை கோடி ரூபாயை சேமிக்கக் கூடியதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்ல, கரந்தகொல்ல நீர்மின் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை அவதானிக்கும் நோக்கில் அமைச்சர் நேற்று (திங்கட்கிழமை) கண்காணிப்புப் பயணமொன்றை மேற்கொண்டார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், “உமா ஓயா பலநோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பணிகள் சற்று தாமதமடைந்துள்ளன. அதனை விரைவாக முன்னெடுப்பது பற்றி ஆராயப்பட்டது.
உமாஓயா மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 120 மெகாவொற்ஸ் மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது. எனவே, இத்திட்டம் முடிவடைந்த பின்னர் இலங்கை மின்சார சபைக்கு நாளொன்றுக்கு ஒன்றரை கோடி ரூபாயை சேமிக்கக் கூடியதாக இருக்கும்.
முன்கூட்டியே திட்டமிட்டிருந்த கால எல்லைக்குள் திட்டம் நிறைவுபெறவில்லை. பல தடைகள் ஏற்பட்ட நிலையில் அவற்றுக்குத் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியுள்ளது. இதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் முழு ஆதரவையும் வழங்கியுள்ளனர். திட்டம் பற்றி அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளேன்.
தேர்தலை இலக்கு வைத்து நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தவில்லை. இதன் பணிகள் நிறைவுபெறுவதற்கு இன்னும் 6 மாதங்களாவது செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.