பணிப்பகிஸ்கரிப்பைக் கைவிட்ட யாழ் மாநகரசபை சுகாதாரத் தொழிலாளர்கள் (காணொளி)

414 0

sequence-01-still007யாழ்ப்பாணம் மாநகரசபை சுகாதார ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளனர்.

நேற்று மாலை வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் சுகாதார ஊழியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், மாநகரசபை ஆணையாளர் பொன்னம்பலம் வாகீசன் மற்றும் வடக்கு மாகாண உள்ளுராட்;சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைடுத்து சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதுடன், இன்றிலிருந்து பணிக்குத் திரும்புவதாக அறிவித்துள்ளனர்.

யாழ்.மாநகரசபையின் தற்காலிக சுகாதார தொழிலாளர்களாக கடமையாற்றுகின்ற 120 சுகாதார தொழிலாளர்களுக்கும், ஏனைய 70 தொழிலாளர்களுக்கும் படிப்படியாக நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதையடுத்து, ஊழியர்கள் கடமைப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

முதல் 3 மாத காலத்திற்குள் 90 பேருக்கும், அடுத்த 6 மாத காலத்திற்குள் ஏனையவர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளரும், யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமை வகித்த வடக்கு மாகாணசபை உறுப்பினரால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கடந்த 9 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குடும்பங்களின் நிலமையை கவனத்தில் எடுத்து கடந்த 9 நாட்கள் பணிப்புறக்கணிப்புக்குரிய சம்பளம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இதற்கு கருத்துத் தெரிவித்த உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் மாநகரசபை ஆணையாளர் சம்பளம் வழங்குவதாயின் பல அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உடனடியாக அதற்குரிய உத்தரவாதத்தை தரமுடியாது என்றும் தெரிவித்தனர்.

இதனையடுத்து கடந்த 9 நாட்களாக மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு மேலதிக நேர அடிப்படையில் சம்பளம் வழங்குகின்ற ஆலோசனையை மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்ததையடுத்து அதற்குரிய சம்மதத்தை உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் மாநகரசபை ஆணையாளர் வெளியிட்டனர்.

மேலும் ஊழியர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக மாதம் ஒரு முறை வடக்கு முதலமைச்சர், உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இணைந்து சந்தித்து பேசுவது என்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.