நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மைத்திரி

309 0

779774926presநாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.

நல்லாட்சி அரசாங்கமானது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் அதனை குழப்பும் வகையிலான செயற்பாடுகளில் இனவாத சக்திகள் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றன.

அரசாங்கமானது அரசியலமைப்பை மாற்றியமைத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முன்முயற்சிகளை எடுத்து வருகின்றது.

ஆனால் இந்த முயற்சிகளைக் கூட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினர் உட்பட இனவாத அமைப்புக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்த நிலையில் நாட்டில் நல்லிணக்கச் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படாதுவிடின் தேசிய அழிவொன்றுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

கொழும்பில் இடம்பெற்ற நல்லிணக்க செயலணியின் 2016ம் ஆண்டுக்கான ‘நம்பிக்கைக்கான சிறகடிப்பு’ என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி,

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை ஏற்கனவே நாம் தாமதித்து விட்டோம்.

அதனால் தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இத்தகைய சந்தர்ப்பத்தில் சிலர் நல்லிணக்கத்தை அடைவது பாரிய சவால் என்பதை அறியாது அதனை சமஷ்டி என விமர்சிக்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்தும் நல்லிணக்கத்தை வேடிக்கையாகப் பார்ப்போமானால் தேசிய அழிவொன்றுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

நாட்டில் பல வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால் நாட்டு மக்கள் வேறுபட்டு கிடந்தனர். இன்று அந்த நிலைமையில் மாற்றம் செய்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரிய சவாலுக்கு நல்லாட்சி அரசாங்கம் முகம் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் எமது நாட்டிலுள்ள சிலருக்கு நல்லிணக்கம் என்பது வேடிக்கையாகத் தெரிகின்றது. அதனால் அவர்கள் அந்தச் சொல்லை நிந்தனை செய்கின்றனர்.

அரசின் நல்லிணக்கச் செயற்பாட்டினை எதிர்த்தரப்பினர் சமஷ்டிக்கான செயற்பாடு என்று அவமதிக்கின்றனர்.

இவ்வாறு நல்லிணக்க செயற்பாடுகளை தொடர்ந்தும் நிந்திப்பார்களாயின் அவர்கள் மீண்டும் கண்ணீர் சிந்த வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதுடன் அது பேரழிவையும் உருவாக்கி விடும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இதனைவிட கடந்த வாரம் இந்தியாவின் ‘இந்து’ பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியிருந்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பது எனது பொறுப்பு மட்டுமல்ல. அது மிகப்பெரிய கடமையுமாகும். புதிய அரசியலமைப்பின் ஊடாக சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பலப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

தெற்கு மக்கள் சமஷ்டி என்றதும் அச்சமடைகின்றனர். வடக்கு மக்கள் ஒற்றையாட்சி என்றதும் அச்சம் கொள்கின்றனர். நாம் இந்த வார்த்தைகளைக் கொண்டு மோதிக்கொண்டிருக்கக் கூடாது. அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு வடிவத்தை நாம் கொண்டுவர வேண்டும்.

பரவலாக்கத்தை புரிந்து கொள்ள பக்குவம் தேவைப்படுகின்றது. வடக்கிலோ, தெற்கிலோ இனவாதிகளை நாம் திருப்திப்படுத்த முடியாது. எது நல்லது? அதிக மக்களால் எது ஏற்றுக்கொள்ளக்கூடியதோ அதனையே நாம் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி இந்தப்பேட்டியில் கருத்துக் கூறியுள்ளார்.

வடக்கில் 90 வீதமான தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்தனர். அவர்களின் பிரச்சினைகளை நான் தீர்ப்பேன் என்று என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பது எனது பொறுப்பு மட்டுமல்ல, அது மிகப்பெரிய கடமையுமாகும்.

எமது நல்லிணக்க முயற்சிகளை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது இலகுவான விடயமல்ல. ஆனாலும் சவால்களுக்கு மத்தியில் இதனை நாம் செய்துவருகின்றோம் என்றும் ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார்.

உண்மையிலேயே நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பான ஜனாதிபதியின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கதாகவே அமைந்திருக்கின்றன.

2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. தமிழ் மக்கள் பேரிழப்புக்களை சந்தித்திருந்தனர். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் முன்னைய அரசாங்கமானது இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. வெறும் கண்துடைப்புக்காக அரசியல் தீர்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுகின்றோம் என்று காட்டுவதற்காக சுமார் ஒருவருட காலம் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

2011ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் முன்னைய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

16 சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றதையடுத்து பேச்சுவார்த்தை மேசையிலிருந்து அரசாங்கம் விலகிக்கொண்டது.பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்ட அரசாங்கம் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அரசாங்கத்தின் சார்பில் பேச்சுக்கள் இடம்பெறவில்லை என்றும் கருத்துக்களை தெரிவித்தது.

உண்மையிலேயே இதயசுத்தியுடன் முன்னைய அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவில்லை என்பதற்கு நல்ல உதாரணமாக அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு அமைந்திருந்தது.

யுத்தத்தில் பேரிழப்புக்களை சந்தித்த தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில்தான் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பொது எதிரணி வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் பேராதரவு வழங்கியிருந்தனர். இதனால் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார்.

அன்று யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் தமிழ் மக்கள் தமக்குள் ஒரு தீர்ப்பை எடுத்துக்கொண்டனர்.

தமிழ் மக்களின் இந்தத் தீர்ப்பை அறிந்த பின்னரே தமிழ்க்கட்சிகள் தமது முடிவை அறிவிக்கும் நிலை ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு சிறுபான்மை மக்கள் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைத்து தமது தீர்ப்பை வழங்கியிருந்தனர்.

அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக தான் செயற்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளமை அவரது கருத்துக்களிலிருந்து புலனாகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமானது பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முயற்சி எடுத்து வருகின்றது.

ஆனால் அந்த முயற்சி எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்ற கேள்வி தற்போது எழுகின்றது.ஏனெனில் அரசாங்கத்தின் நல்லிணக்கத்திற்கான இந்த முயற்சிக்கு தென்பகுதியில் கடும் எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கமானது சிறுபான்மை மக்களிடம் நாட்டை தாரைவார்க்கப் போகின்றது என்று இனவாத சக்திகள் குற்றஞ் சுமத்தி வருகின்றன.

இவ்வாறான இனவாத சக்திகளின் கை ஓங்குமானால் அரசாங்கமானது எந்தளவு தூரத்திற்கு நல்லிணக்க முயற்சியினை கொண்டுசெல்லும் என்ற வினா தற்போது எழுப்பப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இனவாதிகளின் செயற்பாடுகளுக்காக சிறுபான்மையின மக்களை நடுவீதியில் அரசாங்கம் விட்டுவிடக்கூடாது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே சிறுபான்மையின மக்கள் அரசாங்கத்தை ஆதரித்துள்ளனர். எனவே அதற்கேற்றவகையில் தீர்வுகாணப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

உண்மையிலேயே சிறுபான்மை மக்கள் தமது பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வுகாணும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர்.

எனவே அந்த நம்பிக்கையை வீணடிக்காத வகையில் அரசாங்கம் செயற்படவேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.