அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளி மாணவர் காரில் சுட்டுக்கொல்லப்பட்டு, உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தவர் குர்னூர் சிங் (வயது 17). இந்திய வம்சாவளி சீக்கியர். இவர் அங்குள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் படித்து வந்ததுடன், தனது தந்தையின் கடையில் வேலையும் பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இவர், தந்தையின் கடையில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் காரில் சுட்டுக்கொல்லப்பட்டு, உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை. அவர் கடையில் இருந்து எடுத்து வந்த ரொக்கப்பணம், திருட்டு போகவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக சாக்ரமன்டோ பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இதுபற்றி அவரது நெருங்கிய உறவினரான தேஜிந்தர் சிங்கூறும்போது, “இதை எங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை” என்றார். இனவெறி பிரச்சினையால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.