கோடிக்கணக்கில் அ.தி.மு.க., தி.மு.க. பணப்பட்டுவாடா

304 0

201611151157117492_millions-admk-dmk-payment-3-constituency-to-postpone-the_secvpfஅதிமுகவும், திமுகவும் போட்டிப் போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். இந்நிலையில் 3 தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதன் மீது மக்கள் கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் சிதைத்து விடும் வகையில் தான் உள்ளன.

தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் போட்டிப் போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வரும் நிலையில் அதை தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கூச்சமோ, குற்ற உணர்வோ இல்லாமல் ஒவ்வொரு வீட்டிற்கும், அதிலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் அடங்கிய உறையை வினியோகித்துச் சென்றனர்.

தஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் ஓட்டுக்கு ரூ.500 வீதம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் ஓட்டுக்கு ரூ.2000 வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓட்டுக்கு 1500 ரூபாயும், தி.மு.க. சார்பில் ஓட்டுக்கு 500 ரூபாயும் வழங்கப்பட்டன. திருப்பரங்குன்றம் தொகுதியிலும் இதே அளவில் பணம் வினியோகிக்கப்பட்டது.

அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. சார்பில் நேற்று பணம் வழங்கப்பட்டிருக்கிறது.

ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு கட்சி வேட்பாளர்களும் அந்தத் தாள்களைத் தான் வாக்காளர்களுக்கு வழங்கினார்கள். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இரு கட்சிகளின் வேட்பாளர்களும் ரூ.1000, ரூ.500 ஆகிய தாள்களை மட்டுமே வழங்கினர்.

தஞ்சாவூர் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வேட்பாளர் சார்பில் 1500 ரூபாய்க்கு ரூ.1000 மற்றும் ரூ.500 தாள்களும் மீதமுள்ள தொகைக்கு ரூ.100 தாள்கள் ஐந்தும் வழங்கப்படுகின்றன.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் ரூ.50 கோடியும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தலா ரூ.40 கோடியும் குறைந்தபட்சமாக வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டிருப்பதாக யூகிக்க முடிகிறது.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் 3 தொகுதிகளுக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினால் இதை உறுதி செய்து கொள்ள முடியும். அடுத்து வரும் 4 நாட்களில் இன்னும் கூடுதலாக பணம் வினியோகிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

வாக்காளர்களுக்கு இது வரை வினியோகிக்கப்பட்ட ரூ.130 கோடியில் ரூ.120 கோடி மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 தாள்கள் ஆகும். இதன்மூலம் 3 தொகுதிகளிலும் தேர்தல் விதிகள் மட்டுமின்றி, கருப்புப்பணத் தடுப்பு சட்ட விதிகளும் மீறப்பட்டிருக்கின்றன என்பதை உணரலாம். இவ்வளவுக்கும் பிறகு 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டால் அது ஜனநாயகப் படுகொலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்ததாகவே அமையும். இது தேர்தல் ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்ப்பதாக அமையாது.

எனவே, அரசியலமைப்பு சட்டத்தின் 324-ஆவது தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். இத்தொகுதிகளின் அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.