ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தந்தை யாழில் காலமானார்!

439 0

 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனும் ஸ்ரீஹரனின் தந்தை வெற்றிவேல் (75-வயது) இன்று (27) அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளார்.

தனது தந்தை இறப்பதற்கு முன்னர் வீடியோ கோலில் தந்தையின் முகத்தை பார்க்க சட்டத்தரணி ஊடாக முருகன் விடுத்த கோரிக்கை தமிழக அரசு மறுக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் தந்தையின் உடலையாவது இறுதியாக பார்க்க அனுமதிக்குமாறு முருகன் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது உறவினர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

குறித்த வழக்கில் இவர்கள் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. தமிழக அரசும் விடுதலை செய்யும் முடிவில் உள்ளது.

ஆனாலும், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் ஏழு பேரின் விடுதலையும் தாமதமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.