தமிழகத்தில் இன்னும் 2 மாதத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்

270 0

தமிழகத்தில் இன்னும் 2 மாதத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அரவக்குறிச்சி தொகுதி பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சின்னதாராபுரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு, மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணி, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் அமைச்சராக இருந்த போது இந்த தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.பி.யாக பணியாற்றினார். அவர் வரும்போதெல்லாம் என்னிடம் கோரிக்கை மனு அளிப்பார். ஆனால் தற்போதுள்ள அ.தி.மு.க.வின் 39 எம்.பி.க்களும் கொலு பொம்மைகளாக இருக்கிறார்கள்.

மேலும் அவர் தனது பெயர் சொல்லும் அளவுக்கு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஒரு காலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சதாசிவம் இருந்தபோது எப்படி இருந்ததோ அந்த நிலை தற்போது அரவக்குறிச்சியில் வரவேண்டும்.

கோவில்களில் அமைச்சர்கள் எதற்காக பூஜைகள் நடத்துகிறார்கள் என்றால் அவர் திரும்பவும் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். தற்போது கைநாட்டு அரசியல் மட்டுமே நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அவரது போட்டோ பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது.

ஆனால் ஏன் இப்போது அவ்வாறு செய்யவில்லை. ஏன் மக்களை ஏமாற்ற வேண்டும்.ரூ. 500, ஆயிரம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது கறுப்பு பணத்தை பதுக்குபவர்களுக்கு உதவுவதற்காகவே. மக்களின் கஷ்டம் பிரதமருக்கு ஏன் தெரியவில்லை. இது சாதாரண இடைத்தேர்தல் அல்ல. இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.தமிழகத்தில் இன்னும் 2 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இங்கு மீண்டும் உதயசூரியன் உதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.