தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இயற்கையாகவே சுவாசிக்கிறார். விரைவில் தனி வார்டுக்கு ஜெயலலிதா மாற இருப்பதால் அவருக்கான அறை தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ந் தேதி முதல் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சையில் உள்ள அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் குழுவும், லண்டன் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த டாக்டர் குழுவினரும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிறப்பான சிகிச்சை காரணமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது.
தற்போது ஒரு நாளைக்கு 20 மணி நேரத்துக்கும் மேலாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயற்கை சுவாசம் இல்லாமல் இயல்பாக மூச்சு விடுகிறார் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். அதாவது காலை தொடங்கி நள்ளிரவு வரை அவர் நன்றாக மூச்சுவிடுகிறார் என்றும், அவரது உடல்நிலை முன்னேற தொடங்கி உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூங்கும் நேரத்தில் மட்டுமே செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் வேகமான முன்னேற்றத்தை கண்டு டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனவே அவருக்கு செயற்கை சுவாசத்தை முழுமையாக அகற்றுவது குறித்து டாக்டர்கள் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த வார கடைசியில் அவர் தனி வார்டுக்கு மாற்றப்படலாம் என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்காக தனி அறையும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.