வட தமிழீழத்தில் கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டும்-மருத்துவர் த.காண்டிபன்

414 0

கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டிபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..

வெலிசர கடற்படை முகாமிலிருந்து வீடு சென்ற சிப்பாய்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதனால் அவர்கள் விடுமுறையில் சென்ற மாவட்டங்கள் நான்கு புதிதாக இனணந்து மொத்தமாக கொரோனா தொற்று இன்று 20 மாவட்டங்களாக உயர்வடைந்துள்ளது.

இதில் இன்று திருகோணமலை மாத்தளை மொனராகலை அனுராதபுரம் ஆகியன இணைந்துள்ளன. இதனால் இலங்கையில் கொரோனா தொற்றில்லா பகுதி சுருங்கி வருகின்றது.

மேலும் இத் தொற்றானது சிப்பாய்களுக்கு பரவியது போன்று சுகாதார சேவையில் ஈடுபடுவர்களுக்கும் தொற்றுவதற்கு அதிக அளவிலான ஆபத்து உள்ளது.

ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள வட தமிழீழத்தில் மக்கள் வைத்தியசாலைக்கு வருவது அதிகரித்து உள்ளது. அத்துடன் மீண்டும் வைத்தியசாலையினை பழைய நிலையில் இயக்குமாறு சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாயகம் சுற்றறிக்கையின் முலம் கேட்டுள்ளார். ஆயினும் அவ்வாறு சேவைகளை விஸ்தரிக்க பல வைத்தியசாலைகளில் இன்னமும் முகக்கவசம் தனி நபர் பாதுகாப்பு அங்கிகளுக்கு பற்றாக்குறை உள்ளது.

நோயாளிகள் வரும்போது சரியான தடுப்பு  நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நோயாளிகளிடம் இருந்து சுகாதார பணியாளருக்கு  கொரோனா தொற்றலாம் என சுகாதார சேவைகளில் ஈடுபடுவர்களுக்கு ஒரு அச்சம் உள்ளது.

இத்தகைய நிலையில் நாங்கள் எமது பரிசோதனைகளை பல்வேறுபட்டவர்களுக்கு விஸ்தரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சொன்னால் பின்வரும் வகையினருக்கு இப்பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.

1.நாளாந்தம் ஏற்படுகின்ற சந்தேகத்திற்குரிய தொற்றாளர்களுக்கு சோதனை செய்தல்.

2. உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களிற்கு மீண்டும்  சோதனைகளை செய்தல்.

3. ஆரம்ப பரிசோதனையில் தொற்றில்லை என கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு சோதனைகளை மீண்டும் மீண்டும் பரிசோதனைகளை செய்தல்

4. தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன்  நேரடி தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களை சோதனை செய்தல்.

5.  தனிமைடுத்தப்பட்ட முகாங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு சமூகத்திற்கு இனணக்கப்பட முன்னர் சோதனைகளை மேற்கொள்ளல்

6. வெளிநாட்டிலிருந்து வருகை தந்த சகல தரப்பினரையும் சோதனை செய்தல்.(முதல் தொடர்புள்ளவர்கள்- யாழ்ப்பாணத்தில் 1200பேர்)

7. கொரோனா தொற்று அறிகுறிகளை காட்டுகின்ற சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும்   இராணுவம் உள்ளிட்ட தொற்றுக்குள்ளாக கூடிய அபாயம் உள்ளவர்க்களுக்கு சோதனை செய்தல்.

இவ்வாறு சோதனை செய்ய வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் நாங்கள் ஒரு நாளைக்கு 1500 வரை பரிசோதனைகளை  கூட்ட வேண்டிய தேவை இருக்கிறது.  அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் தனியார் துறையினால் 400 பேருக்கும் அரசாங்கத்தின் பரிசோதனை நிலையங்களில் 1000 பேருக்கும் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையினால் வட தமிழீழத்திலும் இப் பரிசோதனைகளை மேற்குறிப்பிட்டவர்களுக்கு  அதிகரிப்பதற்கு சுகாதார அதிகாரிகள் தங்கள் கவனத்தை செலுத்துமாறும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தேவையான முகக்கவசம் தனி நபர் பாதுகாப்பு அங்கிகளை தொடர்சியாக வழங்குவதையும் உறுதி செய்யவும்.