வடக்கில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஆவா என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழு ஒன்று ஈடுபட்டுள்ளது.
இதன் காரணமாக வட பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆவா குழு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்ளை முன்வைத்துள்ளனர்.
அந்த வகையில் பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆவா குழு தொடர்பில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆவா குழுவுக்கும் இராணுவத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எனினும், இக்குழுவுடன் தொடர்புடையதாக குறிப்பிட்டு கைது செய்யப்பட்டுள்ளவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற தமிழர் ஆவார்.
இந்த குழு பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டதல்ல, கோவில் சண்டையில் உருவானதே ஆவா குழு. 2011ஆம் ஆண்டு யாழ்பாணம், இணுவில் அம்மன் கோவிலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றது.
இந்த மோதலின்போது எதிர்தரப்பினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஒன்று கூடிய குழுவே ஆவா குழுவாக மாற்றம் பெற்றுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த குழுவில் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே பெரும்பாலும் காணப்படுகின்றனர். மேலும் இவர்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுதல் போன்ற குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கடந்த காலங்களில் ஆவா குழுவினர் ஒப்பந்த அடிப்படையில் குற்றச் செயல்களில் ஈடுப்பட்டுள்ளமைக்கான தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் பாராளுமன்றில் கூறியுள்ளார்.
ஆவா குழுவின் முதலாவது கத்தி பிரேஸிலில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது தமிழ் நாட்டின் ஊடாகவே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளிலுள்ள உறவினர்கள் மூலமே இவர்களுக்கு பணம் வருவதாகவே நாம் கருதுகிறோம். இந்த சகல இளைஞர்களிடமும் நவீன ரக மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றன என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.