தென் தமிழீழம் அம்பாறை மாவட்ட கொரோனா தொற்றாளர் குணமடைந்தார்!

295 0
அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட இருவரில் ஒருவர், அக்கரைப்பற்றிலுள்ள தனது இல்லத்துக்கு நேற்று (25) மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த குறித்த நபர், இம்மாதம் 8ஆம் திகதி சிகிச்சைக்காக வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

தொற்றுக்குள்ளான குறித்த நபர், கட்டார் நாட்டுக்குச் சென்று கடந்த மாதம் 16ஆம் திகதி நாடு திரும்பியிருந்தார். இவரது மாதிரிகள், இம்மாதம் 6ஆம் திகதி கண்டி போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனை ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.

இதற்கமைவாக, அவரது மருத்துவ அறிக்கை இம்மாதம் எட்டாம் திகதி சுகாதார தரப்பினருக்கு கிடைக்கப் பெற்றிருந்தது. இதன் பிரகாரமே, குறித்த நபருக்கு கொவிட் 19 தொற்று உள்ளதென அடையாளம் காணப்பட்டு, வெலிகந்தை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக இவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

இவ்வாறு பொலன்னறுவை – வெலிகந்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரு வாரங்களின் பின்னர் மருத்துவ பரிசோதனைகள் இவரிடம் மேற்கொள்ளப்பட்டன. இம்மருத்துவ மாதிரி அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதனைத் தொடர்ந்து இவரது மருத்துவ அறிக்கை நெகடிங் என வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், இந்நபர் சுகம் பெற்றுவிட்டார் என அடையாளம் காணப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த நபர், நேற்று மாலை அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள தனது இல்லத்துக்கு அம்பியூலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு வீடு திரும்பிய குறித்த நபர், கொரோனா தொற்று நோய் தடுப்பு செயற்பாட்டுக்கு அமைவாக 2020.04.25 முதல் 2020.05.09ஆம் திகதி வரை 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டுமென, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த நபரின் மனைவி, தற்போது வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வருகின்றார்.

இவரது மாதிரிகளும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவரின் இறுதி மருத்துவ அறிக்கைகள் நெகடிவாக அமையுமிடத்து மிக விரைவில் அவரும் வீடு திரும்பக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.

இவ்விருவரும் வசித்து வரும் பிரதேசத்தில் கிருமித் தொற்று நீக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.