திருநெல்வேலியில் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் கைகளைப் பயன்படுத்தாமல், கால் மூலம் இயக்கி, கைகளை சுத்தம் செய்துகொள்ளும் நவீன இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் இதைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 55 வார்டுகளில் 609 ஆண் தூய்மைப்பணியாளர்களும் மற்றும் 468 பெண் தூய்மைப்பணியாளர்கள் என மொத்தம் 1077 தூய்மைப்பணியாளர், 700 டெங்கு ஒழிப்புப் பணியாளர்கள், 32 தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து வார்டுகளிலும் 10 தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி தொடர்ந்து தெளிக்கப்பட்டும், 12 பெரும் இயந்திரங்கள், 160 சிறு தெளிப்பான்கள் மூலமாக மருந்து அடிக்கப்பட்டும், கூடுதலாக 8 லாரிகள் மற்றும் 62 பேட்டரி வண்டிகள் மூலம் கழிவுகள் அனைத்தும் தொடர்ந்து அகற்றியும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பணியாளர்களும் பணியை தொடங்குவதற்கு முன்பும், பணி முடித்த பின்பும், கைகளை சோப் ஆயில் கொண்டு சுத்தப்படுத்த ஏதுவாக, கைகளை பயன்படுத்தாமலே, கால் மூலம் இயக்கி, கைகளை சுத்தப்படுத்தும் நவீன இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு மண்டலத்திற்கு 5 வீதம் 4 மண்டலத்திற்கு 20 இயந்திரங்கள் ரூ.5 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.