முழு ஊரடங்கில் மக்களைக் கண்காணிக்க ஸ்டேஷனுக்கு ஒரு ட்ரோன் கேமரா: கோவையில் சிறப்பு ஏற்பாடு

295 0

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலாக உள்ளது. இதில் கோவை மாநகரில் மட்டும் பாதுகாப்புப் பணியில் சுமார் 1,200 போலீஸார் ஈடுபட உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் தலா ஒரு ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் போலீஸார்.

வைரலான ட்ரோன் காட்சிகள்
திருப்பூரில் கேரம் விளையாடியவர்களை, போலீஸாரின் ட்ரோன் கேமரா படம் பிடித்ததும், அவர்கள் ஓட ஓட ட்ரோன் துரத்தும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட மலைப்பகுதியில் கும்பலாகக் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்களைப் போலீஸாரின் ட்ரோன் கேமரா துரத்தி அடித்தது. குமரி மாவட்டத்தில் கடலில் குளித்தவர்களையும், திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களையும், காட்டுக்குள் பதுங்கிய இளஞ்ஜோடிகளையும்கூட ட்ரோன் கேமராக்கள் விட்டுவைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, இப்போது ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பதைப் பெருமையாக கருதுகிறது தமிழகக் காவல் துறை. அதன் வெளிப்பாடுதான் கோவையிலும் ட்ரோன் மூலம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதாக அறிவித்துள்ளது போலீஸ். எனினும், உண்மையிலேயே இந்த ட்ரோன் கேமராக்கள் மூலம் மக்கள் அச்சப்படுகிறார்களா? இதன் மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கை பலப்படுகிறதா? இவற்றை இயக்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன? பொதுமக்களுடனும் ட்ரோனை இயக்குபவர்களுடனும் இதுகுறித்துப் பேசினோம்.

பழங்குடியினரின் பயம்
கோவை ஆனைகட்டி (கேரள – தமிழக எல்லை) மலைக்கிராமங்களில் கடந்த 30 நாட்களுக்கு மேலாகவே ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கே மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் காரணமாக இரு மாநில போலீஸாரும் ஆனைகட்டி மற்றும் அட்டப்பாடி பிரதேசத்தில் ட்ரோன் கேமராக்களை இந்த ஊரடங்கு காலத்தில் அடிக்கடி பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ட்ரோன் மீதான பயம் இங்குள்ள இரு மாநிலப் பழங்குடி கிராமங்களிலும் இருக்கிறது.

கூலி வேலைக்காக வெளியில் சென்றுகொண்டிருந்த பழங்குடிகள், ஊரடங்கு காரணமாய் இப்போது வீடுகளுக்குள் அடைந்து கிடக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே காட்டுக்குள் போய் கீரை, கிழங்கு என ஏதாவது கொண்டுவருகின்றனர்.

“இங்கே மது அருந்துபவர்கள் அதிகம். தற்போது மதுக் கடைகள் பூட்டிக்கிடக்கின்றன. முன்பெல்லாம் இது போல மதுக்கடை பூட்டியிருந்தால் இரு மாநிலங்களிலும், உடனே ஊறல் போட்டு மணக்க, மணக்க சாராயம் தயாரிப்பார்கள். இரு மாநிலங்களைப் பிரிக்கும் கொடுங்கரை பள்ளத்தில் இது மிகுதியாக இருக்கும். இப்போது இந்த ட்ரோன் எங்கே வருமோ, நம்மைக் காட்டிக்கொடுத்துடுமோ என்ற பீதியில் யாருமே அந்த வேலைக்கு தலைவைத்துப் படுப்பதில்லை” என்கிறார்கள் தூவைப்பதி கிராமத்தைச் சேர்ந்த மலைவாசி இளைஞர்கள் சிலர்.

அடங்காதவர்களை அடக்கும் சாதனம்
“கோவையில் மாநகர்ப் பகுதியில் மட்டுமல்ல, புறநகர்ப் பகுதியிலும் காலியாகக் கிடக்கும் மைதானங்கள், விவசாய நிலங்கள் போன்ற பகுதிகளில் பணம் பந்தயம் கட்டி கோலிக்குண்டு விளையாடுவது, மொட்டை மாடிகளில் பணம் வைத்து சீட்டாடுவது, கிரிக்கெட் விளையாடுவது எல்லாம் நடக்கிறது. இவர்கள் எல்லாம் தலைக்கு மேலே ட்ரோனைப் பார்த்தால்தான் பயப்படுகிறார்கள். வாரிச்சுருட்டி ஓட்டம் பிடிக்கிறார்கள். சிலர் மூஞ்சிக்கு முகக்கவசம் போட்டுக் கொண்டு ட்ரோனைக் கல்லால் அடித்து சேதப்படுத்தவும், கையால் எட்டிப் பிடிக்கவும்கூட முயற்சி செய்கிறார்கள்.

ஊரடங்கில் அடங்காமல் திரிபவர்களை மட்டுமல்ல, இப்படியானவர்களையும் தேடிப் பிடித்து அவர்களுக்குத் தேவையான உபசரிப்பைக் கொடுத்தே வழியனுப்புகிறோம்” என்கின்றனர் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸார் சிலர்.

காணாமல்போனால் நஷ்டம்
கோவையில் இப்படியான ட்ரோன்களை வாடகைக்கு வரவழைத்துப் படம் பிடிக்கும் ஸ்டுடியோக்காரர் ஒருவரிடம் பேசினோம். “கோவை மாநகரிலேயே மொத்தமே 25 ட்ரோன்களுக்குள்தான் இருக்கும். ஏரியல் வீயூவில் கல்யாண வீடு, இதர விசேஷங்களில் வீடியோ எடுக்க, ட்ரோன் வைத்திருப்பவர்களைத்தான் அணுகுவோம்.

அதை 6 மணிநேரம் பயன்படுத்தவே 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கேட்பார்கள். ஒவ்வொரு ட்ரோன் கம்பெனி, ஆற்றல், பேட்டரி பவர் எல்லாம் உத்தேசித்து அது குறிப்பிட்ட உயரத்திற்கும், தூரத்திற்கும் பறந்து சென்று வரும். சில சமயங்களில் கடற்பகுதிகளில் காற்று அதிகம் இருந்தால் அந்த நேரத்தில் பேட்டரியும் வீக்காகிவிட்டால் காற்றடித்த திசையில் கடலில் போய் விழுந்துவிடும்.

ஒரு ட்ரோன் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் விலை வரும். அது அப்படியே போக வேண்டியதுதான். சமீபத்தில் கன்னியாகுமரி கடற்கரையில் அலையோடு விளையாடுகிற மாதிரி ஒரு புதுமணத் தம்பதியை ட்ரோனில் படம் பிடிக்கப்போய் அந்த ட்ரோன் அடித்த காற்றுக்கு அப்படியே கடலில் விழுந்து காணாமல் போய்விட்டது.

ட்ரோன்களை இயக்க கோவையில் இரண்டு கல்லூரிகள் பயிற்சி மையங்கள் நடத்துகின்றன. சில நாட்கள் இவற்றை இயக்கப் பயிற்சி கொடுக்க 45 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் பெறுகிறார்கள். அப்படி பயிற்சி பெற்று, சான்றிதழ் பெற்றவர்கள்தான் வெளியே போய் ட்ரோன் இயக்க முடியும்.

ஒரு ஊரில் ஒரு நிகழ்ச்சியில் இந்த ட்ரோன் மூலம் வெளிப்புறப் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் அந்தக் ஊர் காவல் நிலைய எல்லைக்குள் அனுமதி வாங்க வேண்டும். அதனால் இப்படியான ட்ரோன் வைத்துள்ளவர்களைக் காவல் துறையினர் தெரிந்தே வைத்திருப்பார்கள்” என்றார் அந்த ஸ்டுடியோக்காரர்.

ட்ரோன்கள் வழியிலான கண்காணிப்பு, கோவை மக்களின் நடமாட்டத்தைக் குறைக்குமா என்பதை அடுத்த நான்கு நாட்களில் தெரிந்துகொள்ளலாம்!