பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு மே 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் தாக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12227 ஆக உயர்ந்துள்ளது. 256 பேர் உயிரிழந்துள்ளனர். 2755 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது மே 9-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு நட்பு நாடான சீனா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. அவ்வகையில், சீனாவில் கொரோனோ வைரசுக்கு சிகிச்சை அளித்த ராணுவ மருத்துவர்கள் 10 பேர் கொண்ட குழு, பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. இரண்டு விமானங்களில் மருந்துப் பொருட்களும் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.