பொருளாதார பேரழிவில் இருந்து மக்களை காக்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி

276 0

பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய பா.ஜ.க. அரசு போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மக்கள் ஊரடங்கு காரணமாக ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். தற்போது மக்கள் ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடக்கம், வேலைவாய்ப்பின்மை, பெருமளவில் மக்கள் குடிபெயருதல், உற்பத்தி மற்றும் வர்த்தக முடக்கம் ஆகியவற்றினால் ஏற்படுகிற பாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஏறத்தாழ ஆறு மாத காலத்துக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.

எனவே கடும் பாதிப்பில் இருக்கும் தொழிற்சாலைகளை மீட்க கடனை மறுசீரமைத்து ஒத்திவைத்தல், வட்டியை தள்ளுபடி செய்தல், 6 மாதத்திற்கு வரிச்சலுகைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும் இதில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணத் தொகை வழங்கவேண்டும்.

புலம் பெயர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் முடங்கி கிடக்கும் தொழிலாளர்களிடம் எந்த ஆவணத்தையும் எதிர்பார்க்காமல் மாதம் ரூபாய் 7,500 உடனடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மக்கள் ஊரடங்கு நேரத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பேரழிவில் இருந்தும், கொரோனா பாதிப்பில் இருந்தும் மீட்க தேவைப்படும் நிதியாதாரத்த்தை மத்திய பா.ஜ.க. அரசு பெறுவதற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருப்பது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்ததாகும்.

கடந்த ஜனவரியில் பட்ஜெட்டை சமர்ப்பிக்கிற போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 66 டாலராக இருந்தது. கடந்த 21 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது 21 டாலராக குறைந்திருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலுத்தவேண்டிய தொகையில் 40 பில்லியன் டாலர் ரூபாய் மதிப்பில் 3 லட்சம் கோடி மத்திய அரசுக்கு மிச்சம் ஏற்பட்டிருக்கிறது.

மத்திய அரசு கடந்த 6 ஆண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைச்சரிவை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 12 முறை உயர்த்தியுள்ளது. இதன்மூலம் மத்திய அரசுக்கு ஏறக்குறைய ரூபாய் 20 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கிறது. இத்தகைய நிதியாதாரங்களை பயன்படுத்தி கொரோனா நோயை ஒழிக்கவும், பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்றவும் மத்திய பா.ஜ.க. அரசு போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.