ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்துடன் பணி ஓய்வுபெறும் மருத்துவர்களின் பணியை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு பணி நியமண ஆணைகள் வழங்கப்படும்.
தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்டுள்ள செவிலியர்களுக்கு பணி ஆணை கிடைத்தவுடன் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.