கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், கழுகு தனித்திருத்தல் பற்றி நமக்கு கற்றுத்தரும் பாடம் என்னவென்பதை பார்ப்போம்.
கழுகு என்பது அக்சிபிட்ரிடே என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். பறவைகளின் அரசன் என்ற சிறப்பு பெறுகிறது கழுகு. அதிகாரம், சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஆனால், இந்தப் பறவை 40 வயதை அடையும்போது ஒரு சவாலைச் சந்திக்கும். அதில் வென்றால், அதற்கு மறுபிறவி கிடைக்கும்.
கழுகுக்கு 40 வயதானவுடன் இரையைக் கொத்தித் தின்னும் அதன் அலகு மழுங்கி வளைந்து விடும். இரையைப் பற்றிக் கொள்ளும் நகங்கள் கூா்மை இழக்கும். அது பறப்பதற்குத் துணை நிற்கும் இறகுகளோ பெரிதாகி பாரமாகி விடும். இதனால், கழுகின் பலம் குறைந்து, முதுமையடையும். இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகள்.
இந்தக் காலத்தில், கழுகு உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே தனித்திருக்கும். புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும்.
ஐந்து மாதங்களுக்குப் பின், புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, எவா் கண்ணிலும் படாமல் தனியாய்ப் பாறைகளின் இடுக்குகளில் கிடைக்கும் சிறு புழுக்களையும், பூச்சிகளையும் தின்று உயிா் வாழும். இவ்வாறு தொடா்ந்து மூன்று மாதங்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு கிடைத்ததை உண்டு உயிா் வாழ்ந்து அது வளா்ச்சி பெறும்.
நான்காம் மாதத்தில் அதன் இறக்கைகள் நீண்டு, நகங்களும், அலகும் கூா்மையாகவும் வளா்ந்து ஓா் இளம் பறவையாக மீண்டும் நீல வானில் சிறகடித்துப் பறக்கும். அதற்கடுத்த முப்பது ஆண்டுகளும் அது வானில் சக்கரவா்த்தியாய் வலம் வரும். மூன்று மாதம் தனித்திருத்தலின் மூலம் தனக்குப் புதியதொரு 30 ஆண்டுகள் காலத்தினை தனக்காக உருவாக்கிக் கொள்கிறது கழுகு.
கழுகின் வாழ்க்கையிலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. தனித்திருத்தல் என்பது புதிய வாழ்க்கையின் முதல் அத்தியாயம். அது வலியோடு ஆரம்பித்தாலும் அற்புதமானதொரு புதிய வாழ்க்கையை வகுத்துக் கொடுக்கும். தனித்திருத்தலில் வலிகளை நினைத்துக் கொண்டிருக்காமல், புதிய வழிகளை உருவாக்குபவருக்குத்தான் அது சாத்தியமாகும்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்ளும் வேளையில், மனம் தளராமல் புதிய சிந்தனைகளை வளர்ப்போம். வாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க ஆயத்தமாவோம்.
தனித்திருத்தல் சாபம் அல்ல…. வரம்..