கொரோனா வைரசை ஒழிக்க அரசுடன் இணைந்து செயல்படுங்கள் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடியோ மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-
நினைத்தாலே நெஞ்சம் பதற வைக்கிற, கொடிய வைரஸ் கொரோனா, தமிழகத்தை மட்டும் அல்ல, உலக நாடுகள் அனைத்தையும், அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
உலகப் பேரழிவாய் உருவாகி இருக்கும், கொடிய கொரோனா வைரஸ் நோயை, கட்டுப்படுத்தி, தடுத்து நிறுத்தவும், ஒழித்துக் கட்டவும், உலக நாடுகள் அனைத்தும், கடும் முயற்சிகள் மேற்கொண்டு, நடவடிக்கை எடுத்து வருகின்றன.
நமது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசு, மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, உலக சுகாதார நிறுவனமும், பல உலக நாடுகளும் பாராட்டியுள்ளது.
கொடிய வைரஸ் கொரோனாவால், இந்தியத் திருநாடு பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, பிரதமர், அதிக அக்கறை கொண்டு, துரித நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு வருகிறார். நம் தமிழ்நாட்டில், அம்மாவின் அரசு, மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் பறி போய்விடக் கூடாது என்பதை உணர்ந்து, அரசு இயந்திரங்களை முழுமையாக முடுக்கி விட்டு, அம்மா அரசு, மிகுந்த கவனத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நம் மாநில மக்களோடு பிற மாநில மக்களும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் தமிழ்மக்களும் அயல்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் நலம் பெறப் பிரார்த்தனை செய்வோம்!
அன்புமிக்க பெரியோர்களே! வணக்கத்திற்குரிய தாய்மார்களே! பாசத்திற்குரிய சகோதர சகோதரிகளே! கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி, உங்கள் திருப்பாதங்களை மன்றாடி, வேண்டுகிறோம்!
மக்களைக் காக்கப் பாடுபடும் அம்மாவின் அரசுக்கு, ஒத்துழைப்பு நல்குங்கள்! உங்கள் அரசோடு இணைந்து செயல்படுங்கள்.
கொடிய வைரஸ் கொரோனாவை ஒழித்து, வெற்றி கொள்வோம், வாருங்கள்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.