மன்னார் மாவட்டத்தில் தீயணைப்பு வாகன ஏற்பாடு இன்மையால் மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி பொது வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது
நேற்று (24) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் திடீர் மின் ஒழுக்கு காரணமாக தனியார் வைத்தியசாலை எரிந்து நாசமாகியுள்ளதுடன், மருத்துவ உபகரணங்கள் மருத்துவ கருவிகள் மருந்துகள் உட்பட 35 இலட்சத்துக்கும் அதிகளவான பெறுமதியுடைய சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
விபத்து தொடர்பாக உடனடியக செயற்பட்ட காவல்துறையினர், மன்னார் நகரசபையினர், படையினர், கடற்படையினர், பொது மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முறையான தீயணைப்பு ஏற்பாடு மன்னார் மாவட்டத்தில் இன்மையால் நகர சபை மற்றும் காவல்துறையினரின் நீர் கொண்டு செல்லும் வாகனங்களை பயன்படுத்தியே தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
தீயணைப்பு வாகனம் இன்மையால் இது வரை 10 ற்கு மேற்பட்ட பெரும் தீ விபத்துக்கள் கடந்த இரு வருடங்களுக்குள் மன்னார் மாவட்ட பகுதிகளுக்குள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.