பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் – அஜித் ரோஹன

316 0

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும், சுகாதார ஆலோசனைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிலங்காவின்   பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஊரடங்கு வேளையில் பொதுமக்கள் எமக்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.

பொலிஸ் என்ற ரீதியில் நாம் எவ்வேளையிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையிலேயே இருக்கிறோம். ஊரங்கு காலத்தில், பல்வேறு பகுதிகளில் சட்டவிரோமாக மதுபான தயாரிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

இதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வாரத்திற்குள் நாம் அவ்வாறான சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வோம்.

மேலும், ஊடரங்கு காலத்தில் வேறு மாவட்டங்களுக்குச் செல்ல முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 11 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிலிருந்த நிலைமைக்கு திரும்புவது, மக்களின் கைகளிலேயே உள்ளது.

எனவே, அனைவரும் ஊரடங்கு காலத்தில் எமக்கான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்படுத்த வேண்டும். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.

அவ்வாறு செயற்பட்டால், நிச்சயமாக எம்மால் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியும். இதனை மீறுபவர்களுக்கு எதிராக நாம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.