உலகெங்கும் அச்சுறுத்தும் கொடிய “கொறோனா” தொற்றுநோய் காரணமாக, எமது தாயக தேசத்திலும் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளமையும், இதனால் நாளாந்க் கூலி வேலை செய்து வாழ்வை முன்னெடுக்கும் குடும்பங்களின் அவல நிலையுணர்ந்தும்,யேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள், தம்மாலான உதவிகளை, முழுமனதோடும், ஆர்வத்தோடும் தொடர்ந்து நல்கியவண்ணம் உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, யேர்மனியின், கெசன் மாநிலத்திற்கு உட்பட்ட பென்ஸ்கைம், கெப்பன்கைம் ஆகிய நகரங்களில் வாழும் எம் உறவுகளால், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிவுக்கு உட்பட்ட, குமுழமுனை கிராமத்தில் வாழும் வறிய நிலையுடைய நூறு (100) குடும்பங்களுக்கு, நேற்றைய தினம் (22.04.2020) ரூபா மூன்று இலட்சம் (300,000/=) பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
தற்போதைய இடர்கால நிலையுணர்ந்து, செய்யப்பட்ட இவ் உதவியானது, எங்கள் புலம்பெயர் மக்களின் பேராதரவை மீண்டும் நிரூபணமாக்குவதாகவும்,தமக்கு இது மிகவும் பெறுமதியான உதவியாகியது எனவும், குமுழமுனை கிராமத்தில் வாழும் மக்கள் தமது நன்றியையும், வாழ்த்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.