கோவிட் -19 தாக்கத்துடன், நாடாளுமன்றத் தேர்தலின் மொத்த செலவு இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸிக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளை விட அதிகமாக அதிகரிக்கும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரியில், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக தேர்தல் செயலகம் மதிப்பிடப்பட்ட செலவு 5 மில்லியன் ரூபாய் ஆகும்.
இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நாட்டின் நிலவும் இச்சூழ்நிலை காரணமாக தேர்தலுக்கான செலவை கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்தலுக்கான செலவு 7 பில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும் என தேர்தல்கள் செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
தேர்தல்கள் செயலகம் சமர்ப்பித்த மதிப்பீட்டின் அடிப்படையில் திறைசேரி ஏற்கனவே 7 பில்லியனை தேர்தலுக்காக ஒதுக்கியிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் தாக்கதிற்கு முன்னர் மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருந்ததால், மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயற்படுத்தும்போது செலவுகள் அதிகரிக்கும் என மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சுமார் 700 தேர்தல் அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக செயலகம் ஏற்கனவே 50,000 முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் தொற்றுநீக்கி ஆகியவற்றை இறக்குமதி செய்திருந்தது, ஏனெனில் அடிப்படை தேர்தல் தொடர்பான பணிகள் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.