வெற்றிக்கு முன்பே ஊரடங்கை கடைபிடிக்காமல் இருப்பது ஆபத்தானது எனவும், மக்களுக்கு அரசு நம்பிக்கையூட்ட வேண்டும் எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.23) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை அடுத்த சில நாட்களில் கட்டுப்படுத்துவது சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை மருத்துவத்துறை புள்ளிவிவரங்கள் ஏற்படுத்தியுள்ளன. அதேநேரத்தில் இலக்கை எட்டுவதற்கு முன்பே சலித்துக் கொண்டு, சுணங்குவது நம்மை வெற்றிக்கு பதிலாக தோல்விக்கு அழைத்து சென்று விடும். எனவே, கரோனா நோய் ஒழிப்புப் போரை மக்கள் உற்சாகத்துடன் தொடர வேண்டும்.
கரோனா வைரஸ் நோயை ஒழிப்பதற்கான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. அடுத்த 10 நாட்களுக்கு மிகவும் கவனமாக இருந்து விட்டால் கரோனா வைரஸ் ஒழிப்புப் போரில் வெற்றியை தொட்டு விடலாம். ஆனால், வெற்றி இலக்கைத் தொடுவதற்கு இன்னும் 25% தொலைவு இருக்கும் நிலையிலேயே, மக்களிடம் ஒருவிதமான அலட்சியம் ஏற்படத் தொடங்கிவிட்டதை உணர முடிகிறது.
ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு வாரத்தில் தமிழகத்தின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி கிடந்ததை பார்க்க முடிந்தது. ஆனால், இப்போது அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் இயல்பாக ஓடிக்கொண்டிருக்கின்றன. திண்டுக்கல் உள்ளிட்ட பல நகரங்களில் அனைத்து வகையான கடைகளும் திறக்கப்பட்டு, வணிகம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் காட்சிகளை புதிதாகப் பார்ப்பவர்கள் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது என்பதை நம்ப மாட்டார்கள்.
ஒரு மாதம் வீடுகளுக்குள் அடங்கியிருந்தவர்களுக்கு ஒருவிதமான விரக்தி நிலை ஏற்படும்; அது மனிதர்களை வீடுகளை விட்டு வெளியில் செல்லத் தூண்டும் என்பது தான் உளவியல் தத்துவம் ஆகும். உலக சுகாதார நிறுவனமும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறது.
“தங்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் போது, மக்கள் தங்களின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்றே விரும்புவர். உலக சுகாதார நிறுவனமும் அதையே விரும்புகிறது. ஆனால், நினைத்தது போன்று நாம் பழைய நிலைக்குச் சென்று விட முடியாது. ஆரோக்கியமான, பாதுகாப்பான, எந்த சூழலையும் எதிர்கொள்வதற்கு ஏற்ற உலகத்தை உருவாக்கி விட்டு தான் நாம் பழைய நிலைக்கு செல்ல முடியும். அதற்கு அரசும், மக்களும் நிறைய செய்ய வேண்டும்” என்று உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குநர் டெட்ராஸ் கூறியுள்ளார்.
“கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் கண்டறிய வேண்டும்; தனிமைப்படுத்த வேண்டும்; சோதனை செய்ய வேண்டும்; அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும்; அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டும்” என்பது தான் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப உலக சுகாதார நிறுவனம் நேற்று அறிவித்துள்ள புதிய மந்திரம் ஆகும். உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள இலக்கை நோக்கி குறிப்பிடத்தக்க தொலைவுக்கு தமிழ்நாடு பயணித்திருக்கிறது என்பது தான் மனநிறைவு அளிக்கும் உண்மையாகும்.
தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி கரோனா வைரஸ் நோயால் 1,629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் கூட, அவர்களில் 662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது 41% ஆகும். கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 14 நாட்களில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். கரோனா பாதித்தவர்களை குணப்படுத்துவதில் தமிழகம் சரியான திசையில் செல்வதையே இது காட்டுகிறது.
இதே நிலை தொடர்ந்து, தமிழகத்தில் புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுத்து விட்டால், மே 3 ஆம் தேதி ஊரடங்கு முடியும் போது, தமிழகத்தில் 152 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் இருப்பார்கள். அவர்களும் கூட அடுத்த 3 நாட்களில் குணமடைந்து, வீடு திரும்ப வாய்ப்புகள் உள்ளன. அப்போது தமிழகத்தில் கரோனா இருக்காது.
தமிழகத்திலிருந்து கரோனாவை விரட்டுவதில் நமக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால், இனி புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது தான். அதற்காகத் தான் அனைத்து மக்களும் ஊரடங்கை மதித்து, வீடுகளுக்குள் இருக்க வேண்டும்; தேவையின்றி வெளியில் வரக்கூடாது என்று பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், சமூகப் பொறுப்பின்றி, ஊரடங்கை மீறி மக்கள் சாலைகளில் வலம் வந்தால், அது வெற்றி இலக்கை நோக்கிய பயணத்தை திசை திருப்பிவிடும். எச்சரிக்கை.
கரோனா வைரஸ் ஒழிப்புக்காக ஊரடங்கை கடைபிடிப்பதில் தமிழ்நாட்டு மக்கள் இதுவரை வழங்கிய ஒத்துழைப்பை விட, இனி வரும் 10 நாட்களுக்கு வழங்கவிருக்கும் ஒத்துழைப்பு தான் மிகவும் முக்கியம் ஆகும். புதையல்கள் நிறைந்த பூமியில் 10 அடி ஆழத்தில் இருந்த புதையலை எடுப்பதற்காக 9 அடி ஆழம் வரை தோண்டி, சலித்துப் போன ஒருவன், அதற்கு மேல் அங்கு புதையல் கிடைக்காது என்ற எண்ணத்தில் முயற்சியை கைவிட்டானாம்.
கடைசி நேர விரக்தி மற்றும் அலட்சியத்தால் அவன் புதையலை இழந்தான். அதேபோல், கரோனாவை ஒழிப்பதற்காக ஒரு மாதமாக ஊரடங்கை கடைபிடித்து வரும் நாம், அடுத்த 10 நாட்களுக்கும் அதே ஒழுங்கையும், உறுதியையும் கடைபிடிக்காவிட்டால் கரோனாவை ஒழிக்க முடியாது.
எனவே, கரோனா வைரஸை ஒழிப்பதற்காக அடுத்த 10 நாட்களுக்கு தமிழக மக்கள் ஊரடங்கை இரட்டிப்பு உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும். இதற்காக, அரசும், காவல்துறையும் மேற்கொள்ளும் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் மக்கள் மனதில் அதிகரிக்கும் அலட்சியத்தைப் போக்க நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.