உலகம் முழுவதும் 154 கோடி மாணவர்கள் பாதிப்பு – யுனெஸ்கோ தகவல்

374 0

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்களை மூடியதால் உலக அளவில் 154 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘யுனெஸ்கோ’ கூறியுள்ளது.ஐ.நா. கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) கல்விக்கான உதவி தலைமை இயக்குனர் ஸ்டெபானியா கியானினி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-கொரோனா பரவல் தற்காப்பு நடவடிக்கையாக, உலகின் பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்களில் 89 சதவீதத்துக்கு மேற்பட்டோர், அங்கு செல்ல முடியாமல் உள்ளனர். இந்த எண்ணிக்கையே சுமார் 154 கோடி இருக்கும். அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மாணவிகள் எண்ணிக்கை 74 கோடி ஆகும். அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவிகளில் 11 கோடிக்கு மேற்பட்டோர் குறைவான வளர்ச்சி கொண்ட நாடுகளில் வாழ்பவர்கள். அங்கெல்லாம் கல்வி பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கும்.

இந்த மாணவிகளில் கணிசமானோர் உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கி உள்ளனர்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், எத்தனை மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. வசதியான குடும்பத்து பெண்கள் மட்டும் தொடர்ந்து கல்வி கற்க வாய்ப்புள்ளது.

மற்றவர்கள், படிப்பை பாதியில் கைவிடும் அபாயம் உள்ளது. இது, கல்வியில் பாலின இடைவெளியை அதிகரிக்கும். பாலியல் சுரண்டல் அதிகரிக்கும். சிறுவயது கர்ப்பம், கட்டாய திருமணம் ஆகியவையும் பெருகும்.

சில நாடுகள் காலவரையின்றி பள்ளிகளை மூடுவதற்கு தயாராகி வருவதால், கடந்த கால பிரச்சினைகளில் பெற்ற பாடங்களில் இருந்து, பெண் கல்வியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்னணு முறையில் பாடங்களை கற்பிக்கலாம்.

கற்பிக்கும் நேரம் குறைவதால், கற்றல் திறனும் பாதிக்கப்படும். பெற்றோருக்கு தங்கள் பணியையும் கவனித்துக் கொண்டு, குழந்தைகளின் கல்வியிலும் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.